ஈரான் மீதான தாக்குதலுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று வளைகுடா நாடுகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
ஏற்கெனவே, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் தலைவர்கள் ஈரான் மீதான இஸ்ரேலின் பதில் தாக்குதலில் பங்கேற்க மாட்டோம் என்று தெரிவித்திருந்தனர்.
இஸ்ரேல் - ஈரான் போர்
ஈரானின் ஆதரவு பெற்ற காஸா, லெபனானில் உள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லாக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி, அதன் தலைவர்களை கொன்றது.
இதற்கு பழிதீர்க்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது செவ்வாய்க்கிழமை இரவு 200-க்கும் மேற்பட்ட பலிஸ்டிக் ரக ஏவுகணைகளை பயன்படுத்தி ஈரான் தாக்கியது.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், கடும் கண்டனத்தை பதிவு செய்த அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அறிவித்தது.
மேலும், மேற்கத்திய நாடுகளை ஒருங்கிணைத்து ஈரானுக்கு எதிரான தாக்குதலை முன்னெடுக்க தீவிர ஆலோசனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
வளைகுடா நாடுகள் நடுநிலை
ஈரானைத் தாக்குவதற்கு அதனைச் சுற்றியுள்ள அண்டை நாடுகளான செளதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் உதவி அவசியம்.
இந்த நிலையில், போர்ப் பதற்றம் குறித்து கத்தார் தலைநகர் தோஹாவில் செளதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் அமைச்சர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆலோசனையில், ஈரான் நாட்டு அமைச்சர்களும் பங்கேற்ற நிலையில், போரில் நடுநிலை வகிக்கப் போவதாக அவரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், தங்கள் நாட்டின் நிலப் பரப்பில் இருந்தோ, வான்வழித் தடத்தில் இருந்தோ தாக்குதல் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று ஈரானுக்கு உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்தால், வளைகுடா நாடுகளின் எண்ணெய் ஆலைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விரிவான ஆலோசனையில் அமைச்சர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பிரான்ஸ், பிரிட்டன் அறிவிப்பு
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் ஆகியோரும் ஈரானுக்கு எதிரான எவ்வித தாக்குதலிலும் தாங்கள் இணையப் போவதில்லை என்று ஏற்கெனவே அமெரிக்காவிடம் தெரிவித்திருந்தனர்.
மேலும், ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலிடமும் இரு நாட்டுத் தலைவர்கள் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.