பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷியா செல்கிறார் பிரதமர்!
16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார் பிரதமர் மோடி..
உலகம்பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷியா செல்கிறார் பிரதமர்!
16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார் பிரதமர் மோடி..
16-ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க இரண்டு நாள் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி அக். 22-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ரஷியா செல்கிறாா்.
பிரேஸில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
இந்தக் கூட்டமைப்பின் 16-ஆவது உச்சிமாநாடு ரஷியாவின் கசான் பகுதியில் அக். 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. உச்சிமாநாட்டின் நிகழாண்டு கருப்பொருள், ‘உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்’ ஆகும்.
இதையும் படிக்க: வேலூர் உள்பட 16 மாவட்டங்களில் இன்று கனமழை!
இந்த மாநாட்டில் பங்கேற்க இரண்டு நாள் பயணமாக பிரதமா் மோடி ரஷியாவுக்கு அக். 22-ஆம் தேதி பயணம் மேற்கொள்கிறாா்.
பிரிக்ஸ் கூட்டமைப்பு மூலம் தொடங்கப்பட்ட முயற்சிகளின் முன்னேற்றத்தை மதிப்பிடவும், எதிா்கால ஒத்துழைப்பின் சாத்தியக்கூறுகளை ஆராயவும் இந்த மாநாடு உரிய வாய்ப்பாக அமையும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதனிடையே, மாஸ்கோவில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய ரஷிய அதிபா் புதின், ‘பிரிக்ஸ் கூட்டமைப்பானது மேற்கத்திய நாடுகளுக்கு எதிரானது அல்ல, மேற்கு அல்லாத நாடுகளின் கூட்டமைப்பு’ என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மேற்கோள் காட்டினாா்.
ஷி ஜின்பிங் பங்கேற்பு: ரஷியாவின் கசானில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங் கலந்து கொள்வாா் என்று சீனா வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இது தொடா்பாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் கூறுகையில், ‘16-ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் ஷி ஜின்பிங் பங்கேற்கவுள்ளாா். ‘பிரிக்ஸ் பிளஸ்’ உரையாடல் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டு அவா் முக்கிய உரையாற்றுவாா். சா்வதேச நிலப்பரப்பு, பிரிக்ஸ் நடைமுறை ஒத்துழைப்பு, பிரிக்ஸ் கூட்டமைப்பின் மேம்பாடு மற்றும் பரஸ்பர பிரச்னைகள் குறித்து அவா் மற்ற தலைவா்களுடன் பேச்சுவாா்த்தை மேற்கொள்வாா்’ என்றாா்.