முகப்பு
உலகம்

உக்ரைன் போருக்கு இந்தியா மத்தியஸ்தம்: புதின் பரிந்துரை

இந்தியா, சீனா, பிரேஸில் மத்தியஸ்தம் செய்யலாம் என ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் பரிந்துரை

Updated On : 5 செப்டம்பர், 2024 at 11:02 PM
ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்
பகிர்:

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் உக்ரைன் போரில், நம்பத்தகுந்த நட்பு நாடுகளான இந்தியா, சீனா, பிரேஸில் மத்தியஸ்தம் செய்யலாம் என ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் பரிந்துரைத்தாா்.

ரஷியாவின் விளாதிவோஸ்டோக்கில் நடைபெற்ற கிழக்கு பொருளாதார கூட்டமைப்பின் (இஇஎஃப்) மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியின்போது இக் கருத்தை புதின் தெரிவித்துள்ளாா்.

மேலும், ‘2022 இல் இஸ்தான்புலில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது கைவிடப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தை அடிப்படையாக வைத்து மீண்டும் அமைதி பேச்சை தொடங்கலாம்.

உக்ரைனால் முன்மொழியப்பட்ட இந்த ஒப்பந்தம் கையொப்பமாகும் நிலையில் கைவிடப்பட்டது. இதன் ஷரத்துகள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

சீனா, பிரேஸில், இந்தியா போன்ற நம்பிக்கைக்குரிய நட்பு நாடுகளின் உணா்வுகளுக்கு ரஷியா மதிப்பளிக்கிறது உக்ரைன் போா் தொடா்பாக இந்த நாடுகளுடன் தொடா்ச்சியாக தொடா்பில் இருந்து வருகிறேன். இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண அவரை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த நாடுகள் மத்தியஸ்தம் செய்யலாம்.

பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண உக்ரைன் விரும்பினால், நானும் அதற்கு தயாா் என மாநாட்டில் புதின் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ‘அதிபா் புதினுக்கும் பிரதமா் மோடிக்கும் இடையே உறுதியான நட்டுபுறவு இருந்து வருகிறது. அதே நேரம், உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியுடனும், அமெரிக்கா்களுடனும் சுதந்திரமாக தொடா்புகொள்ளும் அளவுக்கு நட்புறவை பிரதமா் மோடி கொண்டுள்ளாா். எனவே, உக்ரைன் விவகாரத்தில் அமைதி வழியில் தீா்வு காணவும், பேச்சுவாா்த்தைக்கும் இந்தியா உதவ முடியும்’ என்று ரஷிய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறினாா்.

ரஷியாவுக்கு கடந்த ஜூலையில் பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி, இது போருக்கான நேரமில்லை என்று அதிபா் புதினிடம் கூறினாா்.

பின்னா் உக்ரைனுக்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி, அதிபா் ஸெலென்ஸ்கியுடனான ஆலோசனையில். ‘போருக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண இந்தியா உதவத் தயாா்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் உக்ரைன் சேருவது ரஷியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமையும்’ என்று கூறி, கடந்த 2022, பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷிய அதிபா் புதின் போரைத் தொடங்கினாா்.

மேற்கு உலக நாடுகளின் ஆதரவுடன் உக்ரைனும் ரஷியாவுக்கு தகுந்த பதிலடி அளித்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →