இந்தியா இனி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்போவதில்லை என்று தான் கேள்விப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.
அதோடு நின்றுவிடாமல், ஒரு படி மேலே சென்று, தான் சொன்ன தகவலுக்காக இது ஒரு "நல்ல நடவடிக்கை" என்று பாராட்டையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
பிறகுதான் யதார்த்த நிலைக்கு வந்த டிரம்ப், ஆனால் இந்த விவகாரம் குறித்து தனக்கு உறுதியாக எதுவும் தெரியவில்லை என்ற உண்மையையும் வெளிப்படையாகவே கூறிவிட்டார்
வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா இனி ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கப் போவதில்லை என்று தெரிகிறது. அப்படித்தான் நான் கேள்விப்பட்டேன். அது சரியா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது ஒரு நல்ல நடவடிக்கை. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று என கூறியிருக்கிறார்.
25 சதவீத வரி மற்றும் ரஷியாவிடமிருந்து இறக்குமதி செய்வதற்காக அபராதம் என இந்தியாவுக்கு வரி விதிக்கப்பட்டது. எனவே, இந்தியா உள்பட சுமார் 70 வெளிநாடுகளின் ஏற்றுமதி பொருள்களுக்கு அமெரிக்கா புதிய விதிகளை அறிவித்து அது நடைமுறைக்கு வந்த நிலையில் டிரம்ப் இவ்வாறு கூறியிருக்கிறார்.
அமெரிக்க அரசின் நிர்வாக உத்தரவின்படி, இந்தியா அதன் ஏற்றுமதி பொருள்கள் மீது 25 சதவீத வரிகளை எதிர்கொள்ளும், ஆனால் ரஷியாவிடமிருந்து இராணுவ தளவாடங்கள் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா செலுத்த வேண்டிய அபராதம் என்று டிரம்ப் குறிப்பிட்டது எவ்வளவு என்று இதுவரை வெளியிடப்படவில்லை.
டிரம்ப் சனிக்கிழமை இவ்வாறு கூறியிருக்கும் நிலையில், கடந்த வாரம், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டதாகக் கூறும் செய்திகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்தியாவின் எரிசக்தித் தேவைகளைப் பொறுத்தவரை, சர்வதேச சந்தையில் எண்ணெய் கிடைக்கும் விலை மற்றும் அந்த நேரத்தில் உலகளாவிய சூழ்நிலையைப் பொறுத்து நாங்கள் முடிவுகளை எடுக்கிறோம். உங்கள் குறிப்பிட்ட கேள்வியைப் பற்றி இதுவரை எனக்கு எதுவும் தெரியாது. இந்தக் கேள்விக்கான விவரங்கள் என்னிடம் இல்லை என்று பதிலளித்திருந்தார்.
அமெரிக்கா - இந்தியா இடையே மிகப்பெரிய வர்த்தக வேறுபாடு இருப்பதாக டிரம்ப் கூறி வருகிறார். அதாவது, இந்தியா எங்கள் நட்பு நாடு தான், ஆனால், பல ஆண்டுகளாக, நாங்கள் அவர்களுடன் ஒப்பீட்டளவில் சிறிய வர்த்தகத்தையே செய்துவருகிறோம். ஏனெனில் அவர்களின் கட்டணங்கள் மிக மிக அதிகம், உலகிலேயே மிக அதிகக் கட்டணத்தை இந்தியா கொண்டிருக்கிறது என்று குற்றம்சாட்டியிருந்தார்.
எனவே, ஆகஸ்ட் 1 முதல் இந்தியா 25 சதவீத வரியையும், ரஷியாவிடமிருந்து இறக்குமதி செய்வதற்காக அபராதத்தையும் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் ஒரு சில நாள்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
அதற்கடுத்த நாளே, இந்தியா மற்றும் ரஷ்யாவின் நெருங்கிய உறவுகளுக்காக டிரம்ப் விமர்சனத்தையும் முன் வைத்தார். அதாவது, இரு நாடுகளும் தங்கள் செத்துப்போன பொருளாதாரங்களை ஒன்றாக வீழ்த்திக் கொள்கிறார்கள் என்று கூறி பரபரப்பைக் கிளப்பினார்.
இந்த நிலையில், ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து உறுதி செய்யப்படாத ஒரு தகவலை செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார் டிரம்ப்.
இதையும் படிக்க. . இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.