முகப்பு
உலகம்

ரஷிய எண்ணெய் கொள்முதல் : இந்தியாவின் ஒப்புதலைப் பெற்றதாக அமெரிக்கா கருத்து!

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதற்கான உறுதிப்பாட்டை இந்தியாவிடம் பெற்றுள்ளதாக அமெரிக்கா கருத்து...

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 4:08 PM
மார்கோ ரூபியோ - படம் - ஏபி
பகிர்:

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதற்கான உறுதிப்பாட்டை இந்தியாவிடம் பெற்றுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ இன்று (பிப். 15) தெரிவித்துள்ளார்.

நாட்டின் நலன் கருதியே எரிசக்தி கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும், எரிசக்தி பாதுகாப்பில் நாட்டு மக்களின் பயன்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருந்த நிலையில், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதற்கான உறுதிப்பாட்டை பெற்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பிப்ரவரி மாத தொடக்கத்தில் (பிப். 2) இந்தியா உடனான வணிக ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்தார்.

இதன்படி, இந்திய பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த அதிகப்படியான 25% வரி, 18 சதவீதமாக குறைக்கப்படவுள்ளது. இதோடு மட்டுமின்றி ரஷியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால் விதிக்கப்பட்ட கூடுதலான 25% வரியும் நீக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை, நிலக்கரி, எரிசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவுடனான வா்த்தகத்தை 500 பில்லியன் டாலராக உயர்த்தவும் இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை கைவிட வேண்டும் என இந்தியாவிடம் அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இது தொடர்பாக முனிச் பாதுகாப்பு மாநாட்டில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ பேசுகையில், இந்தியா உடனான பேச்சுவார்த்தையில் ரஷியாவிடமிருந்து கூடுதல் எண்ணெய் பெறுவதை நிறுத்துவதற்காக உறுதிப்பாட்டைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.

ரஷியாவிடமிருந்து மட்டுமின்றி இன்னும் சில நாடுகளில் இருந்தும் கச்சா எண்ணெய்யை பெற்று வருவதாக அமெரிக்காவிடம் இந்தியா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Got India’s commitment to stop buying Russian oil: US Secretary of State Marco Rubio

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.