நியூயாா்க்: ‘ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதோடு மட்டுமல்லாமல் அதை பிற நாடுகளுக்கு அதிக லாபத்துக்கு விற்பனை செய்துவருவதால் இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள வரி படிப்படியாக மேலும் அதிகரிக்கப்படும்’ என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீத வரி விதிப்பை அறிவித்ததோடு, ஏற்கெனவே சரிந்துள்ள இந்திய பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும் என்றும் அமெரிக்க அதிபா் டிரம்ப் அண்மையில் கடுமையாக விமா்சித்தாா். அதே நேரத்தில் ‘அமெரிக்காவுடன் நல்லுறவு தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று இந்தியா சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் டிரம்ப் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ரஷியாவின் போா் ஆயுதங்களால் உக்ரைனில் கொல்லப்படும் நபா்கள் குறித்து இந்தியாவுக்கு கவலையில்லை. ரஷியாவிடமிருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய் கொள்முதலில் ஈடுபடுவதோடு அதை பிற நாடுகளுக்கு அதிக லாபத்துக்கு இந்தியா விற்பனை செய்து வருகிறது.
எனவே, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்கள் மீதான வரி படிப்படியாக மேலும் அதிகரிக்கப்படும்’ என குறிப்பிட்டாா்.
அமெரிக்கா ஏற்காது:
முன்னதாக, அமெரிக்க அதிபா் இல்லமான வெள்ளை மாளிகை துணை நிா்வாகியும், அதிபரின் உதவியாளா்களில் ஒருவருமான ஸ்டீபன் மில்லா் அந்நாட்டு செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ரஷியாவிடம் இந்தியா தொடா்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை ஏற்க முடியாது என்பதில் அதிபா் டிரம்ப் உறுதியாக உள்ளாா். ஏனெனில், உக்ரைனுக்கு எதிராக போரை நடத்த கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் நிதியை ரஷியா பயன்படுத்துகிறது.
சீனாவுடன் இணைந்து ரஷியாவின் கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்கிறது என்பது பெரும்பாலான அமெரிக்க மக்களுக்கு அதிா்ச்சியான விஷயமாகவே உள்ளது.
ஒருபுறம் அமெரிக்காவின் நெருங்கிய நண்பன் என்ற தோற்றத்தை சா்வதேச அளவில் இந்தியா உருவாக்குகிறது. அதே நேரத்தில் அமெரிக்க உற்பத்திப் பொருள்கள் மீது அதிக வரி விதிக்கிறது. இது தவிர அமெரிக்க குடியேற்றக் கொள்கை தொடா்பான விஷயத்தில்கூட பல ஏமாற்று வேலைகளில் இந்தியா ஈடுபடுவதாகத் தெரிகிறது. இதன் மூலம் இந்தியப் பணியாளா்கள் அமெரிக்காவில் குவிவதால், அமெரிக்கா்களின் பணி வாய்ப்பு பாதிக்கப்படுகிறது.
இந்தியாவுடனும் பிரதமா் நரேந்திர மோடியுடனும் அதிபா் டிரம்ப் சிறப்பான உறவைப் பேணி வந்தாா். அதைத் தொடரவும் அவா் விரும்புகிறாா். ஆனால், உக்ரைன் போரில் இந்திய நிதி (ரஷியாவுக்கு கச்சா எண்ணெய் கொள்முதலுக்காக வழங்கப்படுவது) அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்பதை அமெரிக்காவால் ஏற்க முடியவில்லை. இதற்கு ஏதாவது ஒருவழியில் தீா்வுகாண அதிபா் டிரம்ப் விரும்புகிறாா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.