ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது 6 பாகிஸ்தான் போர்விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று விமானப்படை தலைமைத் தளபதி மார்ஷல் ஏ. பி. சிங் சனிக்கிழமை(ஆக. 9) தெரிவித்தார். அவற்றுள் பாகிஸ்தான் விமானப்படையின் 5 போர் ஜெட்களும் ஒரு பெரும் போர்விமானமும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் நடைபெற்ற விமானப்படை சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மார்ஷல் அமர் ப்ரீத் சிங்: “பாகிஸ்தானில் குறைந்தபட்சம் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அதிலும் குறிப்பாக, சுமார் 300 கி.மீ. தொலைவிலிருந்து பாகிஸ்தானின் மின்னணு உளவு விமானம் ஒன்றும் தாக்கப்பட்டது.
நிலப்பரப்புக்கும் வான் வெளிக்குமிடையில் இத்தனை தூரத்திலிருக்கும் இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழிப்பதில் இந்திய விமானப்படையின் இந்த நடவடிக்கை மிகப்பெரியதொன்றாகவே பார்க்கப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.
விமானப்படை தலைமைத் தளபதியால் குறிப்பிடப்பட்டுள்ளவை:
“பாகிஸ்தானின் முரீத் மற்றும் சக்லாலா ஆகிய இரு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் தாக்கப்பட்டன”.
“அதுபோல, குறைந்தபட்சம் 6 ரேடார்கள் (பெரிய மற்றும் சிறிய ரகங்கள் அடக்கம்) லாகூர் மற்றும் ஓகாராவில் உள்ள இரு எஸ்.ஏ.ஜி.டபில்யூ அமைப்புகள் தாக்கப்பட்டன. பாகிஸ்தானின் 3 ஹேங்கர்கள் தாக்கப்பட்டன”.
“தெளிவான வழிகாட்டுதல்களும் எவ்வித தடைகளும் அரசியல் தரப்பிலிருந்து இல்லாததால் இவற்றைச் செய்து முடிக்க முடிந்தது”.
“பாகிஸ்தான் நமது ராணுவ தளவாடங்களை ஏதாவது ஒன்றை தாக்கினாலும் அவர்களுக்கு நாம் தக்க பதிலடி, அதுவும் குறிப்பாக அவர்களது ராணுவ தளவாடங்களை குறிவைத்து அடிக்க, ஏற்கெனவே தீர்மானித்துவிட்டோம்.
இந்தநிலையில், பாகிஸ்தானின் போர்விமானங்கள் நமது எல்லைக்குள் ஊடுருவ முயன்றன. அப்போது அவற்றைச் சுட்டு வீழ்த்துவதில், நமது வான் பாதுகாப்பு அமைப்பான ’எஸ்-400’ இந்த நடவடிக்கைகளில் ஒரு திருப்புமுனையாக அமைந்துவிட்டது”.
“தாக்குதல்களுக்குப்பின், பாகிஸ்தான் ராணுவ தலைமைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதில், இந்தியாவுக்கு ராணுவ முகாம்களை தாக்குவதில் துளியும் விருப்பம் இல்லை. பயங்கரவாத முகாம்களை, அந்த இலக்குகளை அடிப்பதே எங்கள் இலக்கு என்றோம். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை; ஆகவே நாங்கள் கவனமாகவே இருந்தோம், கையாண்டோம்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.