பாகிஸ்தானில், 2 மாதங்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்படும் திடீர் வெள்ளத்தினால், தற்போது வரை 802 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில், கடந்த ஜூன் 26 ஆம் தேதி பருவமழை தொடங்கியது. அன்று முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அந்நாட்டின் நீர்நிலைகள் நிரம்பி அவ்வப்போது திடீர் வெள்ளம் ஏற்பட்டு வருகின்றது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்து முகாம்களில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், தொடர்ந்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தினால் தற்போது 802 பேர் பலியானதாகவும், 1,088 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட கைபர் பக்துன்குவா மாகாணத்தில் 479 பேர் பலியானதுடன், 347 பேர் படுகாயமடைந்தது உறுதியாகியுள்ளது.
இதேபோல், பஞ்சாபில் 165 மரணங்களும், 584 படுகாயங்களும்; சிந்து மாகாணத்தில் 57 மரணங்களும், 75 படுகாயங்களும்; பலூசிஸ்தானில் 24 மரணங்களும் 5 படுகாயங்களும் பதிவாகியுள்ளன.
இத்துடன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், 24 பேர் பலியானதுடன் 29 படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வரும் சூழலில், ஜஸ்ஸார் பகுதியில் உள்ள ரவி நதிக்கு பாகிஸ்தானின் வானிலை ஆய்வு மையம், உயர்நிலை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிரிட்டனில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக போராட்டம்! என்ன நடக்கிறது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.