தென்னாப்பிரிக்கா நாட்டில், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 சிறுவர்கள் மற்றும் 16 வயது சிறுமி ஒருவர் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.
தென்னாப்பிரிக்காவில், தலைநகர் பிரிட்டோரியாவின் அட்டெரிட்ஜ்வில்லே பகுதியில், 3 அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இன்று (டிச. 6) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில், 25 பேர் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததில் 11 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில், 2 சிறுவர்கள் மற்றும் 16 வயது சிறுமி ஒருவரும் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, தகவலறிந்து சம்பவயிடத்துக்கு விரைந்த தென்னாப்பிரிக்காவின் காவல் துறையினர் அங்கு தடயங்களைச் சேகரித்து தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
இதில், தாக்குதல் நடைபெற்றது சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த மதுபானக்கூடம் என்றும், குடிபோதையில் சில மர்ம நபர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாகிஸ்தானில் 9 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.