அமெரிக்கா வெளியிட்டுள்ள 20 அம்ச போர் நிறுத்த ஒப்பந்தத்தில் 90 சதவீதம் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலொதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷியாவுடனான போரை நிறுத்துவது தொடா்பாகப் பேச்சுவாா்த்தை நடத்த அமெரிக்க அதிபா் டிரம்ப்பை உக்ரைன் அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா்.
ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள டிரம்ப்பின் மாா்-அ-லாகோ இல்லத்தில், டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து ஸெலென்ஸ்கி பேசினார்.
அப்போது ஸெலென்ஸ்கி பேசியதாவது:
”அதிபர் டிரம்ப்புடன் அனைத்து விவகராங்கள் குறித்தும் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினோம். கடந்த சில வாரங்களில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் குழுக்கள் அடைந்த முன்னேற்றத்தை நாங்கள் பாராட்டுகிறோம்.
அமைதியை ஏற்படுத்துவதற்கான அனைத்து அம்சங்கள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். 20 அம்ச ஒப்பந்தத்தில் 90 சதவீதம் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அமெரிக்கா - உக்ரைன் பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து 100 சதவீதம் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா - ஐரோப்பா - உக்ரைன் பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்தும் ஏறக்குறைய உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
நீடித்த அமைதி அடைவதற்கு பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஒரு முக்கிய மைல்கல் என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம். எங்களின் குழுக்கள் அனைத்து விவகாரங்களிலும் தொடர்ந்து பணியாற்றும். உக்ரைன் அமைதிக்குத் தயாராக உள்ளது” எனத் தெரிவித்தார்.
டிரம்ப்புடனான சந்திப்புக்கு முன்னதாக கனடாவுக்குச் சென்ற உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி, அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னியுடன் அமைதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
போா் நிறுத்தம் தொடா்பாக அதிபா் டிரம்ப்புடன் பேச்சுவாா்த்தை நடத்த நிகழாண்டு 3-ஆவது முறையாக ஸெலென்ஸ்கி அமெரிக்கா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.