வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா AP
உலகம்

தேர்தலில் போட்டியிடுவது உறுதி, 23,400 கோடி டாலர் ஊழல் குற்றச்சாட்டு நகைப்புக்குரியது! ஷேக் ஹசீனா சிறப்பு நேர்காணல்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பிரத்யேக நேர்காணல் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

_ கௌதம் லாஹிரி

வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் ரகசிய இடத்தில் தங்கியுள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, 15 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்காக’ இந்தச் செய்தியாளரின் கேள்விகளுக்கு மின்னஞ்சல் மூலம் பதிலளித்துள்ளார்.

இந்த பேட்டியில், வாய்ப்பு கிடைத்தால் அடுத்தாண்டு நடைபெறவுள்ள வங்கதேச பொதுத் தேர்தலில் தனது அவாமி லீக் கட்சி நிச்சயமாகப் போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்தாண்டு ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 5 வரை அவரது அரசுக்கு எதிராக வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு பொறுப்பேற்பதாகவும் முதல்முறையாக ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டதில், வெளிநாட்டு தலையீடு இருந்ததா? என்ற கேள்விக்கு ஷேக் ஹசீனா பதிலளிக்கவில்லை.

கேள்வி, பதில்கள்...

அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அவாமி லீக் கட்சி போட்டியிடுவதற்கு வங்கதேச நிர்வாகம் தடை விதித்துள்ளது. உங்கள் கட்சி உறுப்பினர்கள் சுயேச்சையாக போட்டியிடுவார்களா?

அவாமி லீக்கைத் தடை செய்யும் முடிவு ஜனநாயகத்துக்கு விரோதமானது, வங்கதேச அரசியலமைப்பு மற்றும் வாக்காளர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். இது கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்குகிறது. முந்தைய தேர்தல்களில் போட்டியிடாத கட்சிகள் தற்போது போட்டியிடும்போது, புதிய கட்சிகளுக்கு வாக்காளிக்காமல் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க நேரிடும். எனவே, எங்கள் முன்னுரிமை எங்களுக்கு வாக்களிப்பவர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுவதாகும்.

அவாமி லீக் கட்சி மற்றும் அதன் உறுப்பினர்கள், கட்சி சார்பாகவோ, சுயேச்சையாகவோ தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், அதன் தாக்கம் வங்கதேசத்தில் என்னவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

நாங்கள் தேர்தலில் போட்டியிட மறுக்கவில்லை. மாறாக, நாங்கள் முன்பைவிட முழு ஈடுபாட்டுடன் போட்டியிட விரும்புகிறோம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நிர்வாகமும், ஜனநாயகத்தை மதிக்காத நிர்வாகமும் நாங்கள் போட்டியிடுவதைத் தடை செய்துள்ளன.

கட்சிகள் தேர்தல்களைப் புறக்கணிப்பது அல்லது தடை செய்யப்படுவது போன்ற சுழற்சியை உடைக்க வேண்டும், ஏனெனில், இது அரசாங்கத்தைக் குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது. வங்கதேசத்தில் சுதந்திரமான, நியாயமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதன் மூலம், நாடு மீளத் தொடங்கி, நல்லிணக்கத்தை நோக்கி நகர முடியும். அவாமி லீக்கைத் தடை செய்வதன் மூலம் இதை அடைய முடியாது. நாட்டின் நவீன வரலாறு மற்றும் சுதந்திரத்தில் நாங்கள் பின்னிப் பிணைந்துள்ளோம். மேலும் கோடிக்கணக்கான மக்கள் எங்களை ஆதரிக்கின்றனர்.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கடந்தாண்டு ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 5 வரை அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களில் சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையானவர்கள் வங்கதேச பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் பிரதமராக இருந்த நீங்கள், உங்கள் பதவி நீக்கத்துக்கு வழிவகுத்த, அரசால் தூண்டப்பட்ட வன்முறைக்கு பொறுப்பேற்கிறீர்களா?

மக்கள் எழுச்சியின்போது ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் நான் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் தலைவராக அதற்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், களத்தில் பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகளுக்கு நான் உத்தரவிட்டேன் என்றும், அவர்களை இயக்கினேன் என்றும் குறிப்பிடுவது அடிப்படையிலேயே தவறானது. அனைத்து நடவடிக்கைகளும் நல்லெண்ணத்துடன், உயிர் இழப்பைக் குறைக்கவும், சட்டம் - ஒழுங்கு மேலும் சீர்குலைவதைத் தடுக்கும் நோக்கிலும் மட்டுமே எடுக்கப்பட்டன.

ஐ.நா.வின் உயிரிழப்பு மதிப்பீட்டு எண்ணிக்கையை நாங்கள் மறுக்கிறோம். அது சுகாதார அமைச்சகத்தின் கணக்கீடுகளைவிட கணிசமாக அதிகமாக உள்ளது. இடைக்கால அரசாங்கத்தால் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையருக்கு வழங்கப்பட்ட ஆவணமற்ற ஆதாரங்களின் அடிப்படையில் உள்ளது.

இந்த எண்ணிக்கை கலவரத்தில் கொல்லப்பட்ட பாதுகாப்புப் படையினர் மற்றும் அவாமி லீக் கட்சியினரையும் உள்ளடக்கியதாகத் தெரிகிறது. ஆனால், அது தெளிவுபடுத்தப்படவில்லை. 15 மாதங்களாகியும் துல்லியமான இறப்பு எண்ணிக்கையையும், இறந்தவர்களின் பெயர் பட்டியலையும் அரசால் இன்னும் வெளியிட முடியவில்லை. இது வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டது என்று நான் நம்புகிறேன். ஐ.நா.வின் தோராயமான கணக்கீட்டை அரசியல் நோக்கங்களுக்காக அரசு பயன்படுத்துகிறது.

வங்க தேசத்தில் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்ற பொதுத் தேர்தல் உள்பட பல பொதுத் தேர்தல்களின் நேர்மை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. தங்கள் கட்சிகளின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்ததை தொடர்ந்து பல எதிர்க்கட்சிகள் 2024 பொதுத் தேர்தலைப் புறக்கணித்தன. 2024 தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடந்ததாக நம்பவில்லை என்று அமெரிக்கா தெரிவித்தது. நாட்டின் எதிர்க்கட்சியான பிஎன்பி, மோசடி செய்து அரசாங்கம் அமைக்கப்பட்டதாக குற்றம்சாட்டியது. வங்கதேசத்தின் அரசியல் முறையை அவாமி லீக் சிதைத்ததா?

2024 பொதுத் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெற்றதாக சர்வதேச சுயாதீன தேர்தல் பார்வையாளர்களால் தெரிவிக்கப்பட்டன. மக்களின் வாக்குகள் மூலம் அவாமி லீக் ஒன்பது முறை ஆட்சிக்கு வந்துள்ளது. தற்போது ஆட்சியில் இருக்கும் இடைக்கால அரசாங்கத்தைப் போல், மக்கள் வாக்களிக்காமல், அரசியலமைப்புக்கு முரணான வழிகளில் ஒருபோதும் நாங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றவில்லை.

புகைப்படம் அடிப்படையிலான வாக்காளர் பட்டியல், வெளிப்படையான வாக்குப் பதிவு பெட்டிகள் மற்றும் சட்டத்தின் அடிப்படையிலான தன்னாட்சி அமைப்பாக தேர்தல் ஆணையம் போன்றவற்றை அவாமி லீக் அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இந்த சீர்திருத்தங்கள் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்வதற்காக செய்யப்பட்டன. 1970 முதல் 2001 வரை நடந்த தேர்தல் மோசடிகளுக்குப் பிறகு, இந்த அமைப்பு மிகவும் சிறப்பாக மாறியுள்ளது என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.

ஆனால், நான் வெளிப்படையாகக் கூறுவது என்னவென்றால், எங்களின் கடந்த காலத் தேர்தல்கள் உண்மையான பங்கேற்பாளர்களைக் கொண்டிருக்கவில்லை. ஏனெனில், முக்கிய அரசியல் கட்சிகள் ஜனநாயகச் செயல்முறையைப் புறக்கணித்தனர். வாக்காளர்களின் அடிப்படை வாக்களிக்கும் உரிமைகளை மறுத்தனர். காலப்போக்கில், இது எங்கள் அரசியல் செயல்முறைக்கு சேதம் விளைவிப்பதை என்னால் காண முடிகிறது.

அரசியல் கட்சிகள் தேர்தலைப் புறக்கணிக்கும் சுழற்சியை உடைக்க வேண்டும், அவாமி லீக் குறித்து யார் என்ன கூறினாலும், சுதந்திரம் அடைந்ததில் இருந்து நாட்டின் முக்கிய அரசியல் சக்தியாக இருந்து வருகிறது. அரசியலமைப்பை நிலைநிறுத்த உறுதிபூண்டுள்ளது. மேலும், கோடிக்கணக்கான மக்களால் ஆதரிக்கப்படுகிறது என்பதே உண்மை. அவாமி லீக் மீதான தடை தொடர்ந்தால், வங்கதேசத்தில் சட்டப்பூர்வமாக மற்றும் மக்களின் ஆதரவு பெற்ற அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும்.

இது என்னுடைய கருத்து மட்டுமல்ல. வங்கதேசத்தில் அனைவரையும் உள்ளடக்கிய வெளிப்படையான தேர்தல் நடத்த வேண்டும் என்பது ஐ.நா.வின் பரிந்துரையாகும். மேலும், அமெரிக்க அரசின் விருப்பமும் இதுவே என்பதில் நான் உறுதியாக தெரிவிக்கிறேன்.

நீங்கள் பிரதமராக இருந்த 15 ஆண்டு காலத்தில், வங்கதேசத்தில் இருந்து சுமார் 234 பில்லியன் டாலர்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், முன்னாள் நில அமைச்சர் சைஃபுஸ்ஸாமன் செளத்ரி மற்றும் எஸ் ஆலம் குழுமத் தலைவர் முகமது சைஃபுல் ஆலம் ஆகியோர் இந்த செல்வத்தை வெளிநாடுகளுக்கு மாற்ற உதவியதாகவும் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் கூறியதாக பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உங்கள் குடும்பத்துடன் தனிப்பட்ட அல்லது அரசியல் நெருக்கம் கொண்ட தனிநபர்களுக்குப் பயனளிக்கும் வகையில் அரசாங்க நிலத்தை சட்டவிரோதமாக ஒதுக்கியதாக வங்கதேச ஊழல் தடுப்பு ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், உங்களுக்கு எதிராகவும், உங்கள் மகன் சஜீப் வாஸெட் ஜாய் மற்றும் மகள் சைமா வாஸெட் புட்டுலுக்கு எதிராகவும் நீதிமன்ற விசாரணை நடந்து வருகிறது. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், அரசியல் நண்பர்களுக்கும் எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து உங்கள் பதிலென்ன?

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் நிரூபிக்கப்படாதவை மற்றும் எனது அரசியல் எதிரிகளால் கட்டமைக்கப்பட்டவை. வங்கதேசத்தில் ஊழல் இருந்தது என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், எனது குடும்பத்தினர் அரசின் வளங்களிலிருந்து தனிப்பட்ட முறையில் பயனடைந்தனர் அல்லது அரசின் ஊழலில் உடந்தையாக இருந்தனர் என்பதை யாரும் நிரூபிக்கவில்லை.

243 பில்லியன் டாலர் ஊழல் என்பது நகைப்புக்குரியது. அவ்வளவு பெரிய தொகையானது, வங்கதேசத்தின் முழு வரவுசெலவுத் திட்டத்தையும்விட அதிகமாக உள்ளது. நடைமுறையில் இவ்வளவு பெரிய திருட்டு சாத்தியமில்லை. அவ்வாறு ஊழல் நடந்திருந்தால், நாட்டின் பொருளாதாரம் சரிந்திருக்கும். ஆனால், நான் பதவியில் இருந்த 15 ஆண்டுகளில் வங்கதேச பொருளாதாரம் 450 சதவிகிதத்துக்கும் அதிகமாக வளர்ந்தது. இது சர்வதேச நாணய நிதியகம் உள்பட பிற சர்வதேச அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சரிபார்க்கப்பட்ட உண்மை.

சரி, இப்போது நான் கேட்கிறேன். முகமது யூனுஸ், பூர்பாச்சலில் 4,080 கதா (தோராயமாக 127 ஏக்கர்) நிலங்களை வாங்கியிருந்தார். அங்கு ஒரு ரிசார்ட்டையும் அவர் நிறுவினார். டாக்காவின் உத்தராவில் 300 கதா (4.9 ஏக்கர்) நிலம் வாங்கினார்.

1990 ஆம் ஆண்டு வங்கிப் பணியில் யூனுஸ் சேர்ந்தபோது, அவரின் சம்பளம் 6,000 டாகா (இன்றைய மதிப்பில் சுமார் ரூ. 4,300) மட்டுமே. அப்படியென்றால், அவர் எப்படி இவ்வளவு சொத்துகளைக் குவித்தார்? இன்று அவர், பல்வேறு வங்கிக் கணக்குகளில் சுமார் 5,000 கோடி டாகா (ரூ. 3,640 கோடி) மதிப்பிலான நிலையான வைப்புத்தொகையைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வளவு செல்வத்தை எப்படி பெற்றார்? என்பதை அவர் விளக்கவில்லை. ஆனால், இப்போது அதிகாரத்தில் இருப்பது அவர்தான். கிளின்டன்கள் (அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளின்டன் மற்றும் ஹிலாரி கிளின்டன்) போன்ற பிரபலமான நண்பர்கள் யூனுஸுக்கு இருக்கிறார்கள் என்பதற்காக, அவரைக் கண்டும்காணாமல் விடாமல், ஊடகங்கள் அப்பாவியாக இருப்பதை நிறுத்திவிட்டு, இந்த விஷயங்களைப் பற்றி ஆராய வேண்டும்.

தமிழில் - எஸ். ரவிவர்மா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு: விசாரணை நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

வீரா்களையும், விளையாட்டுகளையும் மத்திய அரசு தொடா்ந்து ஆதரிக்கும்: அமைச்சா் மான்சுக் மாண்டவியா

டிடிஇஏ பள்ளிகளின் தொடக்கநிலை பிரிவு மாணவா்களுக்கான விளையாட்டு விழா

கையுந்து பந்து போட்டியில் சிறப்பிடம்: ஆற்காடு பள்ளி மாணவா்கள் மாநில போட்டிக்கு தகுதி

2ம் நிலை காவலா் பணியிடங்களுக்கு நாளை தோ்வு: 3,655 இடங்களுக்கு 2.25 லட்சம் போ் போட்டி

SCROLL FOR NEXT