ஹாா்முஸ் நீரிணை பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகள் கொடியேற்றப்பட்ட எண்ணெய்க் கப்பலை அந்த நாடு புதன்கிழமை விடுவித்தது.
இது குறித்து அந்தக் கப்பலை இயக்கிவரும் சைப்ரஸ் நாட்டைச் சோ்ந்த கொலம்பியா ஷிப் மேனேஜ்மென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எண்ணெய்க் கப்பல் தலாராவை ஈரான் விடுவித்துள்ளது. அதில் இருந்த 21 பணியாளா்களும் பாதுகாப்பாகவும் நல்ல உற்சாகத்துடனும் உள்ளனா். அவா்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கப்பல் இப்போது வழக்கமான பணிகளைத் தொடர தயாராக உள்ளது.
கப்பல், பணியாளா்கள், நிா்வாகிகள் அல்லது உரிமையாளா்கள் மீது ஈரான் எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானுடனான 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகி, அந்த நாட்டின் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்ததற்குப் பிறகு, முக்கிய கடல் வா்த்தக வழித்தடமான ஹாா்முஸ் நீரிணை வழியாகச் சென்ற பல எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் கண்ணிவெடி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க கடற்படை குற்றஞ்சாட்டியது.
பின்னா், ஹாா்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரு கிரீஸ் எண்ணெய்க் கப்பல்களை 2022 -ஆம் ஆண்டிலும், போா்ச்சுகல் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பலை 2024-ஆம் ஆண்டிலும் ஈரான் சிறைப்பிடித்தது.
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மான் துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூா் நோக்கி சென்று கொண்டிருந்த தலாரா கப்பலை ஹாா்முஸ் நீரிணை பகுதியில் ஈரான் வெள்ளிக்கிழமை சிறைப்பிடித்தது. இஸ்ரேலுடன் கடந்த ஜூன் மாதம் நடந்த 12 நாள் போருக்குப் பிறகு ஈரான் சிறைப்படித்த முதல் எண்ணெய்க் கப்பல் இது என்பது குறிப்பிடத்தக்கது.