பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அடியாலா சிறையில் நலமுடன் இருப்பதாக, அடியாலா சிறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்பட்டு கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இம்ரான் கானை சந்திக்க அவரது சகோதரிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு கடந்த 6 வாரங்களாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சிறைக்குள் அவரை காவல் அதிகாரிகள் அடித்துக்கொலை செய்து விட்டதாகத் தகவல்கள் பரவின.
இதனால், இம்ரான் கானின் ரசிகர்கள் மற்றும் அவரது பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின் ஆதரவாளர்கள் சிறையின் வாசலில் திரண்டனர். மேலும், இம்ரான் கான் எங்கே? (வேர் இஸ் இம்ரான் கான்) எனும் ஹேஷ்டேகுகள் எக்ஸ் தளத்தில் உலகளவில் டிரெண்ட் ஆகின.
இந்த நிலையில், அடியாலா சிறையில் இம்ரான் கான் நலமுடன் இருப்பதாகவும், அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் சிறை அதிகாரிகள் இன்று (நவ. 27) தெரிவித்துள்ளனர்.
இத்துடன், இம்ரான் கானின் உடல் நலம் குறித்து அவரது கட்சியின் தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அதிகாரிகள் அவரது இடமாற்றம் குறித்து சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் ஆதாரமற்றவை என்றும் விளக்கமளித்துள்ளனர்.
முன்னதாக, அடியாலா சிறையின் நிர்வாகம் பஞ்சாப் மாகாண அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றது. இருப்பினும், இம்ரான் கானின் சந்திப்பு தனது அதிகாரத்தின் கீழ் வராது என பஞ்சாப் மாகாண முதல்வரும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃபின் மகளுமான மரியம் நவாஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: முதல்முறையாக வெளிநாடு சென்றார் போப் 14-ம் லியோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.