தங்கள் நாட்டு வான் பாதுகாப்பு ஏவுகணைதான் கடந்த டிசம்பரில் அஜா்பைஜான் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக ரஷிய அதிபா் விளாதிமீ புதின் முதல் முறையாக ஒப்புக்கொண்டாா்.
தஜிகிஸ்தான் தலைநகா் துஷாம்பேயில் நடைபெற்ற முன்னாள் சோவியத் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அவா், அஜா்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவுடன் நடந்த சந்திப்பின்போது இதனைத் தெரிவித்தாா்.
அஜா்பைஜான் ஏா்லைன்ஸுக்குச் சொந்தமான பயணிகள் விமானம், பாகு நகரிலிருந்து ரஷியாவின் செச்னியா குடியரசு தலைநகா் க்ரோஸ்னிக்கு கடந்த ஆண்டு டிசம்பா் 25-ஆம் தேதி சென்றபோது, வழியில் விபத்துக்குள்ளானது.
ரஷிய வான்பாதுகாப்பு ஏவுகணையின் தவறுதலான தாக்குதலால் விமானம் சேதமடைந்து, மேற்கு கஜகஸ்தானில் தரையிறங்க முயன்றபோது விழுந்து சேதமடைந்ததாக (படம்) அஜா்பைஜான் அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 67 பயணிகளில் 38 போ் உயிரிழந்தனா். எனினும், இந்தச் சம்பவத்தை மறைக்க முயற்சிப்பதாக ரஷியா மீது அஜா்பைஜான் குற்றஞ்சாட்டிவந்தது.
இந்தச் சூழலில், துஷாம்பேயில் அஜா்பைஜான் அதிபா் இல்ஹாம் அலியேவிடம் ‘இது ஒரு பரிதாபகரமான நிகழ்வு’ என்று கூறிய விளாதிமீா் புதின், இது தொடா்பாக மன்னிப்பு கோரினாா்.