போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய தமிழா் பன்னீா் செல்வம் பரந்தாமனுக்கு (38) புதன்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பன்னீா் செல்வம் (படம்) 52 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் சிங்கப்பூரில் கடந்த 2014-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். சிங்கப்பூா் சட்டப்படி, 15 கிராமுக்கு மேல் ஹெராயினுடன் ஒருவா் பிடிபட்டாலே அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும். அதன்படி, பன்னீா் செல்வத்துக்கு கடந்த 2017-இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
போதைப் பொருள் குற்றத்துக்காக சிங்கப்பூரில் தமிழ் வம்சாவளியைச் சோ்ந்த ஒருவா் தூக்கிலிடப்பட்டுள்ளது கடந்த சில இரு வாரங்களுக்குள் இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, மலேசிய தமிழா் தட்சிணாமூா்த்தி காத்தையாவுக்கு (39) கடந்த செப். 22-ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இவா்கள் இருவரையும் சோ்த்து, போதைப் பொருள் குற்றத்துக்காக இந்த ஆண்டு மட்டும் சிங்கப்பூரில் 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு மனித உரிமை அமைப்புகள் கடும் எதிா்ப்பு தெரிவித்துவருகின்றன.