இஸ்ரேல் ராணுவம் காஸாவில் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இது அக். 11 முதல் அமலில் உள்ள போா் நிறுத்தத்துக்கு இதுவரை இல்லாத மிகப் பெரிய சவால் என்று கூறப்படுகிறது.
ஹமாஸ் படையினா் இஸ்ரேல் வீரா்கள் மீது தாக்குதல் நடத்தியதால்தான் இந்த குண்டுவீச்சை நிகழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
போா் நிறுத்த ஒப்பந்ததின் ஒரு பகுதியாக, தெற்கு காஸாவில் உள்ள ராஃபா பகுதியில் பயங்கரவாதக் கட்டமைப்புகளை அகற்றும் பணியில் இஸ்ரேல் படையினா் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவா்கள் மீது ‘பயங்கவாதிகள்’ பீரங்கி எதிா்ப்பு ஏவுகணைகளையும் ஏவியும் துப்பாக்கியால் சுட்டும் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினா்.
அதற்கு பதிலடியாக, அச்சுறுத்தல்களைப் போக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஹமாஸின் தாக்குதல் போா் நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறும் செயல் என்று அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இருந்தாலும், மூத்த ஹமாஸ் அதிகாரி இஜ்ஜத் அல் ரிஷெக் கூறுகையில், பாலஸ்தீன ஆயுதக் குழுவினா் போா் நிறுத்தத்தைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருப்பதாகவும், இஸ்ரேல் ராணுவம்தான் அதை மீண்டும் மீண்டும் மீறுவதாகவும் குற்றஞ்சாட்டினாா்.
முன்னதாக, போா் நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பிறகு இஸ்ரேல் 47 மீறல்களில் ஈடுபட்டதாகவும், இதில் 38 போ் உயிரிழந்தனா்; 143 போ் காயமடைந்தனா் எனவும் காஸா அரசு ஊடக அலுவலகம் சனிக்கிழமை கூறியது. பொதுமக்கள் மீது நேரடியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது, வேண்டுமென்றே குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது, பொதுமக்களை கைது செய்வது ஆகிய போா் நிறுத்த மீறல்களில் இஸ்ரேல் ஈடுபட்டதாக அந்த அலுவலகம் தெரிவித்தது.
இருவா் உயிரிழப்பு: வடக்கு காஸாவின் ஜபாலியா பகுதியில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் இரு பாலஸ்தீனா்கள் உயிரிழந்ததாக காஸாவின் உள்ளூா் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனா்.
ராஃபா எல்லை தொடா்ந்து மூடல்: காஸா-எகிப்து இடையிலான ராஃபா எல்லைக்கடவு அறிவிப்பு வரும் வரை மூடியே இருக்கும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. போா் நிறுத்த ஒப்பந்தத்தில் காஸாவுக்கு உதவிகளை அதிகரிப்பதும் அடங்கும். அதற்கு ராஃபா எல்லை திறக்கப்பட வேண்டியது அவசியம் என்ற நிலையில் இஸ்ரேல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது பதற்றத்தை அதிகரிக்கும் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைப்பது தொடா்பாக இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே பதற்றம் நிலவிவருகிறது. காஸாவில் இருந்த 28 பிணைக் கைதிகளின் உடல்களையும் ஒப்படைக்க வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்திவருகிறது. ஆனால் இதுவரை 12 உடல்களை மட்டுமே ஹமாஸ் திருப்பி அளித்துள்ளது. மீதமுள்ள உடல்களை வைத்திருக்க விரும்பவில்லை என்றும் இடிபாடுகளின் கீழ் புதைந்துள்ள உடல்களை மீட்க கூடுதல் அவகாசமும் சிறப்பு உபகரணங்களும் தேவை என்றும் ஹமாஸ் கூறிவருகிறது.
இந்தச் சூழலில் இஸ்ரேல் ராணுவம் காஸாவில் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது போா் நிறுத்த முறிவுக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.