வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார்.
நாடு முழுவதும் கடந்த திங்கள்கிழமை கோலாகலமாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து அண்டைவீட்டாருக்கு இனிப்புகளை பரிமாறிக் கொண்டாடினர்.
இந்தியாவைக் கடந்து அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரசு அமீரகம், ஆஸ்திரேலியா, கனடா உள்பட பல்வேறு நாடுகளில் வாழும் இந்திய சமூகத்தினரும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் இந்திய அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் இணைந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார்.
அவரது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஐந்து திரி பித்தளை விளக்கை ஏற்றி, தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்தை தொடக்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் பேசிய டிரம்ப்,
“இந்திய மக்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றுதான் உங்கள் பிரதமரிடம் பேசினேன். ஒரு சிறந்த உரையாடல் நடந்தது. வர்த்தகம் பற்றிப் பேசினோம். அவர் அதில் மிகவும் ஆர்வமாக உள்ளார்.
பாகிஸ்தானுடன் எந்தப் போர்களும் வேண்டாம் என்று நாங்கள் சிறிது நேரத்திற்கு முன்பு பேசினோம். வர்த்தகம் குறித்து மோடியுடன் பேசியது உண்மைதான். பாகிஸ்தானுடனும் இந்தியாவுடனும் எங்களுக்கு எந்தப் போரும் இல்லை. மோடி ஒரு சிறந்த மனிதர், அவர் பல ஆண்டுகளாக எனக்கு ஒரு சிறந்த நண்பராகிவிட்டார்.
இந்த விளக்கு இருளின் மீது ஒளியின் வெற்றி, அறியாமையின் மீது அறிவு மற்றும் தீமையின் மீது நன்மையின் வெற்றி என்பதைக் குறிக்கிறது. ” என்றார்.
முன்னதாக மோடியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய டிரம்ப், தீபாவளி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்.
மோடியுடன் பேசியது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த டிரம்ப், ரஷிய எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளதாகவும், மேலும் கொள்முதலை குறைக்கும் என்றும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.