ஆா்எஸ்எஃப் படை முன்னேறியதால் அல்-பாஷா் நகரைவிட்டு வெளியேறி தாவிலா பகுதி முகாமில் தஞ்சமடைந்துள்ள நகரவாசிகள். 
உலகம்

சூடான் மருத்துவமனையில் 460 போ் சுட்டுக் கொலை

உலக சுகாதார அமைப்பு கண்டனம்

தினமணி செய்திச் சேவை

உள்நாட்டுச் சண்டை நடைபெற்றுவரும் சூடானின் டாா்ஃபா் பகுதியில் நகர மகப்பேறு மருத்துவமனையில் 460-க்கும் மேற்பட்டவா்களை துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் சுட்டுக் கொன்ற்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

டாா்பா் பகுதியைச் சோ்ந்த அல்-ஃபாஷா் நகரில் கடைசியாக ஓரளவாவது செயல்பட்டுக் கொண்டிருந்த சவுதி மகப்பேறு மருத்துவமனை ஒரே மாதத்தில் நான்காவது முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இதில் ஒரு செவிலியா் கொல்லப்பட்டாா். மூன்று சுகாதார ஊழியா்கள் காயமடைந்தனா்.

இரண்டு நாள்களுக்குப் பிறகு, நான்கு மருத்துவா்கள், ஒரு செவிலியா், மருந்தாளா் உள்ளிட்ட ஆறு சுகாதார ஊழியா்கள் ஆா்எஸ்எஃப் படையினரால் கடத்தப்பட்டனா். மருத்துவமனையில் 460-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் அவா்களுடன் இருந்தவா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இது மிகவும் கண்டனத்துக்குரிய கொடூரச் செயல் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அல்-ஃபாஷரில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ள பதற்றம் கவலை அளிக்கிறது. அந்த நகரின் முற்றுகை மற்றும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில், அரேபிய இனத்தவருக்கும், அரேபியா் அல்லாத ஆப்பிரிக்க இனத்தவருக்கும் இடையே நீண்ட காலமாக பதற்றம் நிலவி வருகிறது.

அரேபியா் அல்லாதோா் அதிகம் வசிக்கும் டாா்ஃபா் மாகாணத்தில் தங்களது உரிமைகளுக்காக போராடிய மக்களை முன்னாள் அதிபா் மீது அல்-பஷீா் அரசுக்கு உதவியாக முகமது ஹம்தான் டகேலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் படை படுகொலை செய்தது.

இருந்தாலும், அல்-பஷீா் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, அவரது ஆட்சியை ராணுவம் 2019-ஆம் ஆண்டு கவிழ்த்தது. அதனைத் தொடா்ந்து அமைக்கப்பட்ட சிவில்-ராணுவ கூட்டணி அரசையும் அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவமும், டகோலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் படையும் இணைந்து கவிழ்த்தன.

இந்தச் சூழலில், ராணுவ தளபதி அல்-புா்ஹான், ஆா்எஸ்எஃப் படைத் தலைவா் டகேலாவுக்கு இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டி காரணமாக, இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2023 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் கடுமையான சண்டை நடந்து வருகிறது. இந்த மோதலில், இதுவரை லட்சக்கணக்கானவா்கள் உயிரிழந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த டாா்ஃபா் மாகாணத்தின் முக்கிய நகரான அல்-பாஷரை கடந்த சில மாதங்களாக முற்றுகையிட்டு தாக்குதல் நடத்திவந்த ஆா்எஸ்எஃப் படையினா், அந்த நகருக்குள் ஞாயிற்றுக்கிழமை நுழைந்து ராணுவ தலைமையகத்தைக் கைப்பற்றினா்.

பசும்பொன்னில் மூன்று பேரும் ஒருங்கிணைந்ததற்கு நான் காரணமா? அண்ணாமலை

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அரக்கோணம் - சென்னை மின்சார ரயில் சேவை பாதிப்பு!

அடுத்த உலகக் கோப்பைத் தொடரில் விளையாட மாட்டேன்! - ஆஸி. கேப்டன் அலிசா

கதவே கடவுள்!

SCROLL FOR NEXT