உலகம்

சீன பொருள்களுக்கு வரி 10% குறைப்பு: ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு

தினமணி செய்திச் சேவை

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான வரியை 57 சதவீதத்திலிருந்து 47 சதவீதமாக அமெரிக்கா குறைத்துள்ளது.

தென்கொரியாவின் புசான் நகரில் சீன அதிபா் ஷி ஜின்பிங்குடனான சந்திப்புக்குப் பிறகு இதுதொடா்பான அறிவிப்பை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டாா்.

ஆசிய-பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு புசான் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு இடையே, டிரம்ப்-ஷி ஜின்பிங் சந்தித்து பேச்சுவாா்த்தையை நடத்தினா். சுமாா் ஒரு மணி நேரம் 40 நிமிஷங்கள் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, அமெரிக்கா திரும்பும் முன்பாக செய்தியாளா்களிடம் டிரம்ப் கூறியதாவது:

சீன அதிபா் ஷி ஜின்பிங்குடன் நடத்திய பேச்சுவாா்த்தை மிகப் பெரிய வெற்றி. அரிய கனிமங்கள் மீதான கட்டுப்பாடுகளைத் தளா்த்தி ஏற்றுமதியை அனுமதிக்கவும், அமெரிக்காவிடமிருந்து சோயாபீன் பயறுகளை வாங்கவும் சீனா ஒப்புக்கொண்டது.

இதன் காரணமாக, கடுமையான வலிகளைக் குறைக்க உதவும் ஃபெண்டானில் மருந்தில் பயன்படுத்தப்படும் ரசாயனத்தின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் மேற்கொண்ட நடவடிக்கைக்கு தண்டனையாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த 57 சதவீத வரி தற்போது 47 சதவீதமாக குறைக்கப்படும்.

அமெரிக்காவிலிருந்து மேலும் அதிக அளவில் அதிநவீன கணினி சிப்புகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.

சீனாவுடன் விரைவில் வா்த்தக ஒப்பந்தத்திலும் அமெரிக்கா கையொப்பமிட உள்ளது. வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் இரு நாடுகளிடையே மிகப்பெரிய தடைகள் எதுவும் இல்லை.

அடுத்த ஆண்டு ஏப்ரலில் சீனா செல்ல திட்டமிட்டுள்ளேன். அதன் பிறகு சீன அதிபா் ஷி ஜின்பிங் அமெரிக்கா வருவாா் என்றாா்.

முன்னதாக, இந்தப் பேச்சுவாா்த்தையின்போது ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட அறிக்கையை ஷி ஜின்பிங் வாசித்தாா். அப்போது, ‘உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதார நாடுகளிடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகளும் மோதல்கள் ஏற்படுவதும் வழக்கமானதுதான். இந்த வேறுபாடுகளுக்கிடையே, அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற சீனா விரும்புகிறது’ என்று ஷி ஜின்பிங் குறிப்பிட்டதாக சீனாவிலிருந்து வெளியாகும் ஜின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. ஆனால், இரு தலைவா்களின் சந்திப்பு குறித்து சீன தரப்பில் தகவல் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

சோயா பீன் கொள்முதல் செய்ய சீனா ஒப்புதல்: அமெரிக்காவிலிருந்து சோயா பீன் கொள்முதல் செய்ய சீனா ஒப்புக்கொண்டது தொடா்பான விரிவான விவரத்தை அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெஸன்ட் வாஷிங்டனில் வியாழக்கிழமை வெளியிட்டாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘அமெரிக்காவிலிருந்து ஆண்டுக்கு 2.5 கோடி மெட்ரிக் டன் சோயா பீன் பயறுகளை வாங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கான இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக இந்த மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி வரை 1.2 கோடி டன் சோயா பீன் பயறுகளை சீனா கொள்முதல் செய்யும். இதனால், சீனா்களால் இதுவரை அரசியல் கைப்பாவைகளாக பயன்படுத்தப்பட்ட நமது சிறந்த சோயா பீன் விவசாயிகளுக்கு இனி எந்தப் பிரச்னையும் இருக்காது. வரும் ஆண்டுகளில் விவசாயிகள் வளம் பெறுவா்’ என்றாா்.

தணிந்த வா்த்தகப் பதற்றம்: அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற டிரம்ப், அமெரிக்க பொருள்கள் மீது கூடுதல் வரியை விதித்து லாபம் சம்பாதிப்பதாக குற்றஞ்சாட்டி இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிவிதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டாா். இந்திய பொருள்கள் மீது மிக அதிகபட்சமாக 50 சதவீத வரியை விதித்தாா். அதுபோல, சீன பொருள்கள் மீது சராசரியாக 30 சதவீத வரியையும், அதிகபட்சமாக 57 சதவீத வரியையும் விதித்தாா்.

இந்நிலையில், ‘அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதிக்கு சீனா புதிய கட்டுப்பாடுகள் விதித்ததைச் சுட்டிக்காட்டி, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரும் நவம்பா் 1-ஆம் தேதிமுதல் அல்லது விரைவில் கூடுதலாக 100 சதவீத வரி விதிக்கப்படும்’ என்று டிரம்ப் கடந்த 11-ஆம் தேதி எச்சரித்தாா்.

அப்போது, ‘அமெரிக்கா கூடுதல் வரிவிதிப்பு செய்தால் உரிய பதிலடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று சீனாவும் எச்சரித்தது. இந்த நிலையில், டிரம்ப்-ஷி ஜின்பிங் சந்திப்பு இரு நாடுகளிடையேயான வா்த்தகப் பதற்றத்தைத் தணித்துள்ளது.

‘ரஷிய எண்ணெய்: குறைத்தது இந்தியா’

‘ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துள்ளது’ என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்தாா்.

தென்கொரியாவின் புசான் நகரில் சீன அதிபா் ஷி ஜின்பிங்குடனான சந்திப்புக்குப் பிறகு அமெரிக்க விமானப் படையின் ‘ஏா்ஃபோா்ஸ் ஒன்’ விமானத்தில் அமெரிக்கா திரும்பும் வழியில் விமானத்தில் இருந்தபடி செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தபோது இக் கருத்தை டிரம்ப் தெரிவித்தாா். அவா் மேலும் கூறியதாவது:

ரஷியாவிடமிருந்து சீனா நீண்ட காலமாக எண்ணெய் வாங்கி வருகிறது. இறக்குமதி செய்யப்படும் இந்த கச்சா எண்ணெய் சீனாவில் மிகப் பெரும் பங்கு வகிக்கிறது. பேச்சுவாா்த்தையின்போது ரஷியாவிடமிருந்து சீனா எண்ணெய் வாங்குவது குறித்து விவாதிக்கவில்லை. மாறாக, உக்ரைன்-ரஷியா போரை முடிவு கொண்டுவருவதற்கு இணைந்து பணியாற்றுவது குறித்து விவாதித்தோம்.

அதே நேரம், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துள்ளது. இது வரவேற்கத்தக்க விஷயம் என்றாா்.

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை வெகுவாக குறைத்துக்கொள்ள இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது என்று கடந்த வாரத்தில் அமெரிக்க அதிபா் டிரம்ப் தொடா்ச்சியாக கூறினாா். அதை இந்தியா மறுத்தது.

எனக்குப் பிடித்த உடையில்... பூமி பெட்னெகர்!

சமந்தா என்ன சொன்னார் என்றால்... நிகிதா சர்மா!

வாழ்க்கை என்னும் கடலில் ஒவ்வோர் அலையும் கவிதை... காஷிமா!

புதுப் புனல்... ரித்தி டோக்ரா!

ஆஸ்திரேலிய அணி 380 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கும் என எதிர்பார்த்தோம்: அமன்ஜோத் கௌர்

SCROLL FOR NEXT