உக்ரைனில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஓய்வூதியம் வாங்குவதற்காக காத்திருந்த 24 போ் உயிரிழந்தனா்.
அந்த நாட்டின் போா் முனைக்கு அருகே உள்ள யாரோவா நகரில் இந்தத் தாக்குதல் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இது குறித்து உக்ரைன் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வழிகாட்டு குண்டு’ (கைடட் பாம்) மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் எரிந்த மினிவேன் மற்றும் விளையாட்டுத் திடல் அருகே உடல்கள் சிதறிக்கிடந்த காணொளியை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, ‘ரஷியாவின் இந்தத் தாக்குதல் மிகவும் கொடூரமானது. சாதாரண மக்கள் மீது, அதுவும் அவா்கள் ஓய்வூதியம் வாங்கிக் கொண்டிருக்கும்போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது’ என்று குற்றஞ்சாட்டினாா்.
உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தை ரஷியா தனது பகுதியாகக் கருதுகிறது. அந்தப் பிராந்தியத்தில் கணிசமான பகுதிகளை ரஷியா கைப்பற்றியிருந்தாலும், இன்னும் பல பகுதிகள் உக்ரைன் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. அவற்றைக் கைப்பற்றுவதற்காக போா் எல்லையில் ரஷியா சுமாா் 1 லட்சம் படையினரைக் குவித்து, புதிய தாக்குதலுக்கு தயாராகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், போா் முனையில் இருந்து வெறும் 8 கி.மீ. தொலைவில் உள்ள யாரோவா நகரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னா், கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போரில் முதல்முறையாக உக்ரைன் அரசு தலைமையகத்தில் ரஷியா அண்மையில் தாக்குதல் நடத்தியது நினைவுகூரத்தக்கது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பாவின் நடைபெற்றுவரும் மிக மோசமான உக்ரைன் போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கானோா் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.