வெள்ளை மாளிகை அருகே உள்ள உணவகம் ஒன்றுக்கு, செவ்வாய்க்கிழமை இரவு, உணவருந்த சென்ற அமெரிக்க அதிபரைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் நவீன கால ஹிட்லர் என கோஷமெழுப்பியதால் சங்கடம் ஏற்பட்டது.
அமெரிக்கா, அமெரிக்கர்களுக்காகவே, அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்று அமெரிக்க மக்களின் நலனுக்காக என்று கூறி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
வெளிநாட்டினரை, அமெரிக்காவிலிருந்து வெளியேற்றுவது, அமெரிக்காவுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு பரஸ்பர வரியை அதிகரிப்பது என உலக நாடுகளின் கடும் கண்டனத்தையும் மீறி, அமெரிக்க நலனை மட்டுமே கருத்தில் கொண்டிருப்பதாக பல நடவடிக்கைகளை எடுத்து வரும் டிரம்புக்கு எதிராக அந்நாட்டிலேயே எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.
இதற்கு சாட்சியாகத்தான், செவ்வாய்க்கிழமை கடல் உணவுகள் கிடைக்கும் ஒரு உணவகத்துக்குள் டொனால்ட் டிரம்ப் நுழைந்த போது, அங்கிருந்த மக்கள், அதிபரை வரவேற்காமல், வாஷிங்டன் டிசியை விடுவித்துவிடு, பாலஸ்தீனத்தை விடுவித்து விடு, நவீன கால ஹிட்லர் என்றெல்லாம் கோஷம் எழுப்பினர். சிலர் இந்த கோஷத்தை எழுப்பிய நிலையில், அங்கிருந்த மற்றவர்களும் இதில் சேர்ந்துகொண்டனர்.
இதற்கு பதிலளித்த டிரம்ப், நாம் மிகவும் பாதுகாப்பான நகரில் இருக்கிறோம், அனைவரும் மகிழ்ச்சியாக இருங்கள், நீங்கள் உங்கள் வீட்டுக்குத் திரும்பும்போது, எந்த ஏமாற்றத்தையும் சந்திக்க மாட்டீர்கள் என்று கூறினார்.
இந்த நிலையில், பாதுகாவலர்களால், அங்கிருந்தவர்கள் உணவகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அமெரிக்க மார்கோ ரூபியோ மாகாண செயலர் மற்றும் துணை அதிபர், பாதுகாப்புத் துறை செயலர் உள்ளிட்டவர்களுடன் டிரம்ப் அந்த உணவகத்துக்குச் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.