பாகிஸ்தான் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் இருவர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கடந்த வாரம் பொதுமக்கள் வாழும் இடங்களில் மறைந்துள்ள பயங்கரவாதிகளைக் கொல்லும் நோக்கத்தில் பாகிஸ்தான் விமானப் படை நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தைக் கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அரசுக்கு எதிராக பொதுமக்கள் பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தானின் கைபா் பக்துன்குவா மாகாணம் கைபா் மாவட்டத்தில் உள்ள மதுா் தாரா பகுதியில், தலிபான் பயங்கரவாதிகள் வெடிபொருள்களை பதுக்கி வைத்து ஆயுதங்களை தயாரித்து வந்துள்ளனர். அப்பகுதியைச் சுற்றிலும் பொதுமக்கள் வசித்துவந்தபோதும் அப்பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் விமானப் படை கடந்த வாரம் தாக்குதல் நடத்தியது. இதில், வெடிபொருள்கள் இருந்த கிடங்கு வெடித்து பொதுமக்களில் 30 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் உள்ளூர் மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இத்தகைய செயலைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு நடத்தப்பட்டுள்ளது. உள்ளூர் வணிகம், சந்தை முடங்கிய நிலையில், போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே அரசுக்கு எதிராக முசாஃபர்பாத் நகரில் பேரணியாகச் சென்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பேரவையில் பாகிஸ்தானுக்குட்பட்ட காஷ்மீரில் வசித்துவருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக உள்ள 12 இடங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 38 கோரிக்கைகளை முன்வைத்து அவாமி செயல்பாட்டுக் குழுவினர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இதில், பாகிஸ்தான் ராணுவத்தினரும், ஐஎஸ்ஐ பின்புலத்தில் செயல்படும் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைக் கலைக்கும் விதமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக உள்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | பிஷ்னோய் கும்பலை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.