அமெரிக்காவில், சட்டவிரோதமாக குடியேறிய ஈரான் நாட்டைச் சேர்ந்த 120 பேர் விரைவில் தாயகம் திருப்பி அனுப்பப்படுவார்கள் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறும் வெளிநாட்டினருக்கு எதிராக, அந்நாட்டு அரசு பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதேபோல், அமெரிக்காவில் குடியேறிய 120 ஈரான் நாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், சுமார் 400-க்கும் அதிகமான ஈரான் நாட்டினர் மீண்டும் தாயகம் அனுப்பப்படுவார்கள் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அடுத்த 2 நாள்களில் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் ஈரானியர்களின் முதல் குழு விமானம் மூலம் தலைநகர் தெஹ்ரானை வந்தடையும் எனக் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், அமெரிக்காவின் உள்நாட்டு ஊடகங்களில் இதுகுறித்த செய்திகள் முதலில் வெளியாகின. ஆனால், ஈரான் அரசுடனான இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அரசின் தரப்பில் இருந்து எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக, நிகழாண்டில் (2025) ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் நடைபெற்ற 12 நாள் போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் ராணுவத் தளவாடங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகளின் மீது அமெரிக்கா பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாகிஸ்தான் துணை ராணுவ தலைமையகத்தில் தற்கொலைப் படை தாக்குதல்! 10 பேர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.