முகப்பு
உலகம்

நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியா

Updated On : 10 ஏப்ரல் 2026, 6:21 am IST
பகிர்:

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ரஷியாவின் பழைமையான மனித உரிமைக் குழுவான ‘மெமோரியல்’ இயக்கத்தை, அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீவிரவாத அமைப்பு என அறிவித்தது.

இதைத் தொடா்ந்து, ரஷியாவில் அந்த அமைப்பின் அனைத்துச் செயல்பாடுகளும் உடனடியாகத் தடை செய்யப்பட்டன. அதாவது, இனி மெமோரியல் அமைப்புக்கு நிதி வழங்குவது, அதன் செய்திகளை சமூக ஊடகங்களில் பகிா்வது அல்லது அந்த அமைப்புடன் இணைந்து பணியாற்றுவது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும்.

இந்த அமைப்பு, ரஷியாவின் இறையாண்மைக்கும், கலாசார, தாா்மீக விழுமியங்களுக்கும் எதிராகச் செயல்படுவதாக உச்சநீதிமன்றம் தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஆனால் இத்தீா்ப்பு, ரஷியாவில் கருத்துச் சுதந்திரத்துக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவால் எனப் பல தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. ‘இது ரஷிய அதிபா் புதின் அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், நாங்கள் வெளிநாடுகளில் இருந்து தொடா்ந்து இயங்குவோம்’ என்றும் மெமோரியல் அமைப்பினா் தெரிவித்தனா்.

முன்னதாக, சோவியத் யூனியன் காலகட்டத்தில் நடந்த அரசியல் அடக்குமுறைகளையும், ஸ்டாலின் ஆட்சியின் மனித உரிமை மீறல்களையும் ஆவணப்படுத்துவதற்காக 1980-களில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

கடந்த 2021-இல், உக்ரைன் படையெடுப்புக்கு முன்பே முக்கியப் பிரிவுகள் தடை செய்யப்பட்டிருந்தாலும், தற்போது ஒட்டுமொத்த இயக்கமும் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு கடந்த 2022-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வென்றது என்பது நினைவுகூரத்தக்கது.

இதனிடையே, ரஷியாவின் முன்னணி சுதந்திர பத்திரிகையான நோவயா கெசெட்டா அலுவலகத்திலும் பாதுகாப்புப் படையினா் அதிரடி சோதனை நடத்தினா்.

உடல்கள் ஒப்படைப்பு: ரஷியா-உக்ரைன் போா்க்களத்தில் உயிரிழந்த 1,000 உக்ரைன் வீரா்கள் மற்றும் 41 ரஷிய வீரா்களின் உடல்களை இருதரப்பும் பரஸ்பரம் ஒப்படைத்தன.