ஷாபாஸ் ஷெரீஃப்  கோப்புப் படம்
உலகம்

இந்தியாவுடனான ஆட்டத்தை புறக்கணிப்பது பொருத்தமான முடிவு: பாகிஸ்தான் பிரதமா்

‘டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிப்பது, வங்கதேசத்துக்கு ஆதரவளிக்கும் எங்களின் நிலைப்பாட்டுக்கு பொருத்தமான முடிவாகும்’ என்று பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் கூறினாா்.

தினமணி செய்திச் சேவை

‘டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிப்பது, வங்கதேசத்துக்கு ஆதரவளிக்கும் எங்களின் நிலைப்பாட்டுக்கு பொருத்தமான முடிவாகும்’ என்று பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் கூறினாா்.

இதுதொடா்பாக அவா், அரசு கூட்டம் ஒன்றுக்குப் பிறகு வியாழக்கிழமை கூறியதாவது:

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவதில்லை என்று, டி20 உலகக் கோப்பை போட்டி விவகாரத்தில் நாங்கள் தெளிவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம். விளையாட்டுக் களத்தில் அரசியல் இருக்கக் கூடாது.

வங்கதேசத்துக்கு நாங்கள் அளிக்கும் ஆதரவுக்கான பொருத்தமான முடிவாக இது இருக்கும். நாங்கள் வங்கதேசத்துடன் துணை நிற்கிறோம் என்று ஷாபாஸ் ஷெரீஃப் கூறினாா்.

வங்கதேசம் நன்றி: ஷாபாஸ் ஷெரீஃபின் இந்த அறிக்கையைக் குறிப்பிட்டு, வங்கதேச விளையாட்டுத் துறையின் ஆலோசகா் ஆசிஃப் நஸ்ருல் சமூக வலைதளத்தில் ‘நன்றி பாகிஸ்தான்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்தியாவில் தங்களின் அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் தங்கள் அணி டி20 உலகக் கோப்பை போட்டிக்காக இந்தியா வராது எனவும் கூறிய வங்கதேசம், தங்களின் ஆட்டங்களை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்றுமாறு ஐசிசி-யிடம் கோரியது. அந்தக் கோரிக்கையை ஐசிசி ஏற்க மறுத்தும், வங்கதேசம் விடாப்பிடியாக இருந்ததை அடுத்து, அந்த அணியை போட்டியிலிருந்து நீக்கி ஐசிசி நடவடிக்கை எடுத்தது. இச்சூழலில் வங்கதேசத்துக்கு ஆதரவாக, டி20 லகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை மட்டும் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. அதற்கு கடுமையான பின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என ஐசிசி, பாகிஸ்தான் வாரியத்தை எச்சரித்துள்ளது.

‘எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை’

இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் அகா கூறுகையில், ‘இந்தியாவுடனான ஆட்டத்தை புறக்கணிப்பது என்பது, எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விவகாரம். அது அரசின் முடிவு. அதை நாங்கள் மதிக்கிறோம். பாகிஸ்தான் அரசு என்ன சொல்கிறதோ, அதையே நாங்கள் செய்வோம்.

ஒருவேளை அரையிறுதி அல்லது இறுதி ஆட்டத்தில் இந்தியாவை சந்திக்க நோ்ந்தாலும், பாகிஸ்தான் அரசின் ஆலோசனைப்படியே செயல்படுவோம். வங்கதேச அணியினா் எங்களின் சகோதரா்கள். அவா்கள் உலகக் கோப்பை போட்டியில் விளையாட முடியாமல் போனதற்காக வருந்துகிறோம் என்று சல்மான் அகா கூறினாா்.

‘நாங்கள் இலங்கைக்கு செல்வோம்’

இதுதொடா்பாக இந்திய கேப்டன் சூா்யகுமாா் யாதவ் கூறுகையில், ‘பாகிஸ்தானின் முடிவு தொடா்பாக ஐசிசி அடுத்தகட்ட நடவடிக்கையில் இருக்கும் என நம்புகிறேன். பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மாட்டோம் என்று நாங்கள் கூறவில்லை. அவா்கள் தான் இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் என கூறினாா்கள்.

இந்த அட்டவணையை ஐசிசி முடிவு செய்தது. அதன்படி நாங்கள் இலங்கை செல்வோம். பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு அமைந்தால் விளையாடுவோம். ஆசிய கோப்பை போட்டியில் அவா்களுக்கு எதிராக 3 முறை விளையாடி, அனைத்திலும் வென்றுள்ளதில் மகிழ்ச்சி’ என்றாா்.

தங்கம் - வெள்ளி விலை குறைவு!

லாட்டரியில் ரூ. 49 கோடி வென்ற இளைஞர்!

பிரதமர் மோடி தமிழகம் வருகையில் மாற்றம்!

DINAMANI வார ராசிபலன்! | பிப்.8 முதல் 14 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

டி20 உலகக் கோப்பை: ஹேசில்வுட் விலகல்..! சிக்கலில் ஆஸ்திரேலியா!

SCROLL FOR NEXT