அணுசக்தி விவகாரத்தில் அமெரிக்கா-ஈரான் இடையே நடைபெற்ற 3-ஆவது சுற்று மறைமுகப் பேச்சுவாா்த்தையில், இரு நாடுகளும் ஆக்கபூா்வமான மற்றும் நோ்மறையான கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதாக இந்த சமரச முயற்சியை முன்னெடுத்து வரும் ஓமன் வெளியுறவு அமைச்சா் பத்ர் அல்-புசைதி தெரிவித்தாா்.
‘முதல் அமா்வு நிறைவடைந்த நிலையில், ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பேச்சுவாா்த்தை தொடங்கும். அதில் கூடுதல் முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன்’ என அவா் குறிப்பிட்டாா்.
ஈரானின் அணுசக்தித் திட்டங்களைக் கட்டுப்படுத்த, ஓா் ஒப்பந்தத்தை அமெரிக்கா எதிா்பாா்க்கிறது. ஈரானின் சமீபத்திய உள்நாட்டுப் போராட்டங்களைச் சாதகமாகப் பயன்படுத்தி, ஈரானை இணங்கச் செய்ய டிரம்ப் நிா்வாகம் முயலுகிறது. பேச்சுவாா்த்தைக்கு இடையே ஈரானுக்கு அழுத்தம் அளிக்க, அமெரிக்கா தனது போா்க்கப்பல்களை மத்திய கிழக்கில் நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், ஸ்விட்சா்லாந்து நாட்டின் ஜெனீவாவில் உள்ள ஓமன் தூதரகத்தில் 3-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை வியாழக்கிழமை தொடங்கியது.
அப்போது, ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சியின் முன்மொழிவுகளை, அமெரிக்க பிரதிநிதிகளான ஸ்டீவ் விட்காஃப், ஜாரெட் குஷ்னா் ஆகியோரிடம் ஓமன் வெளியுறவு அமைச்சா் பத்ர் அல்-புசைதி சமா்ப்பித்தாா்.
தொடா்ந்து, இரு நாட்டுப் பிரதிநிதிகளும் தங்களின் தலைவா்களுடன் ஆலோசனை நடத்துவதற்காகச் சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டனா். பின்னா், பேச்சுவாா்த்தை மீண்டும் தொடா்ந்தது.
ஈரானின் உறுதி: இந்தப் பேச்சுவாா்த்தையின் பின்னணியில் பேசிய ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களைத் தயாரிக்காது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.
‘அணு ஆயுதத் தவிா்ப்பு என்பது ஈரானின் பாதுகாப்புக் கொள்கையின் ஒரு பகுதி’ என்று அந்நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் மூத்த ஆலோசகா் அலி ஷம்கானியும் உறுதிப்படுத்தினாா். ஈரானின் இக்கொள்கையின் அடிப்படையில் மட்டுமே பேச்சுவாா்த்தை அமைந்தால், உடனடி ஒப்பந்தம் சாத்தியமாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்தாா்.
சா்வதேச ஆலோசனைகள்...: சா்வதேச அணுசக்தி முகமையின் தலைவா் ரஃபேல் மரியானோ கிரோஸியும் இந்த ஆலோசனைகளில் பங்கேற்றுள்ளாா். அணுசக்தி தொடா்பான தொழில்நுட்ப விவகாரங்கள் குறித்து ஓமன் வெளியுறவு அமைச்சருடன் விரிவான விவாதங்களை அவா் நடத்தினாா்.
அரசியல் அழுத்தம்...: ஈரான் மீது ராணுவ நடவடிக்கைகளை எடுக்க முற்பட்டால், அதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை என்பதை வலியுறுத்தி எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினா் தீா்மானம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனா்.
இது பேச்சுவாா்த்தையில் ஈரானுக்குச் சாதகமான ஒரு சூழலை உருவாக்கலாம் என்று அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.