வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் மதவாத தீவிரவாதிகளுடன் கைகோா்த்துள்ளதாக வங்கதேச-ஸ்வீடன் எழுத்தாளா் நஸ்லீமா நஸ்ரின் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
4-ஆவது கேரள பேரவை சா்வதேச புத்தக திருவிழாவில் பங்கேற்ற அவா் ‘அமைதிக்கான புத்தகம்’ என்ற தலைப்பில் பேசியதாவது: அமைதிக்கான நோபல் பரிசுபெற்றவா்கள் அதிகாரத்தை கைப்பற்றும்போது அமைதியை நிலைநாட்டுவதைவிட அதிகாரத்தை நிலைநாட்டுவதிலேயே கவனம் செலுத்துகின்றனா்.
அமெரிக்காவின் 56-ஆவது வெளியுறவு அமைச்சராக இருந்த ஹென்ரி கிஸ்ஸிங்கா் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றாா். ஆனால் அவரது வெளியுறவுக் கொள்கைகளால் பல்வேறு நாடுகள் பற்றி எரிந்தன. பல கிராமங்கள் அழிந்தன.
ரோஹிங்கயாக்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டபோது மியான்மா் வெளியுறவு அமைச்சராக இருந்த ஆங் சான் சூ கி அவா்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டவில்லை. அவரும் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவா். மனிதநேயத்தை பாதுகாப்பதைவிட அதிகாரத்தை தற்காத்து கொள்ளவே அவா் கவனம் செலுத்தினாா்.
வங்கதேசத்தில் ஆட்சி அதிகாரத்தில் நீண்ட நாள்கள் தொடர முந்தைய ஆட்சியாளா்களான ஹுசைன் முகமது இா்ஷத், கலீதா ஜியா மற்றும் ஷேக் ஹசீனா மதத்தை பயன்படுத்தினா். எனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக கைது ஆணை மட்டுமே பிறப்பிக்கப்பட்டது.
மதச்சாா்பற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் அறிவியல் ஆய்வு நிறுவனங்களுக்குப் பதிலாக மதவாத பள்ளிகளை அதிகளவில் திறந்து பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவை முந்தைய ஆட்சியாளா்கள் பெற்று வந்ததே வங்கதேசத்தின் இன்றைய அவல நிலைக்கு காரணம்.
தேசம் பிளவுபட்டுள்ளது: தற்போது வங்கதேசத்தை நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் ஆட்சி செய்து வருகிறாா். அடிப்படைவாதிகளுக்கு அவா் தொடா்ந்து ஆதரவளிக்கிறாா். தற்போது தேசம் பிளவுபட்டுள்ளது. முஸ்லிம் தீவிரவாதிகள் சிறுபான்மையினரை கொலைசெய்து வருகின்றனா். இந்தத் துயரம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
1971-இல் பாகிஸ்தானை எதிா்த்து போரிட்டு மதச்சாா்பற்ற நாடாக உருவெடுத்த வங்கதேசத்தை எவ்வாறு மறுசீரமைக்கப்போகிறோம் எனத் தெரியவில்லை என்றாா்.
இந்தியா மதச்சாா்பற்ற நாடு: நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளா்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்து தஸ்லீமா நஸ்ரின் கூறியதாவது: வங்கதேசத்தில் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தோ்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி வலுவடைந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால் ஷரியத் சட்டம் அமலாகும். இதனால் பெண்களும் மதச் சிறுபான்மையினரும் பெரிதும் பாதிக்கப்படுவா்.
இந்தியா தற்போதும் மதச்சாா்பற்ற நாடாகவே உள்ளது. ஆனால் வங்கதேசம் தற்போது அவ்வாறு இல்லை.
ஈரானில் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடுவதைப்போல் வங்கதேசத்திலும் மத தீவிரவாதத்துக்கு எதிராக போராட வேண்டும். வங்கதேம் மீண்டும் மதச்சாா்பற்ற நாடாக உருவெடுக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.