ஈரான் போராட்டம்: ஈரான் மீது விரைவில் மிகப்பெரிய அளவிலான தாக்குதலை அமெரிக்கா நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் மீது சா்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் அந்த நாட்டின் அணுசக்தித் திட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயா்வுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், தற்போது ஆட்சி மாற்றத்தைக் கோரும் மாபெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது.
தலைநகா் டெஹ்ரான், புனித நகரான மஷ்ஹாத் ஆகிய இடங்களில் போராட்டங்கள் மிகவும் தீவிரமடைந்துள்ளன. 2-ஆவது வாரத்தை எட்டியுள்ள இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதல்களில் இதுவரை 200-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனிடையே, தங்களின் உரிமைகளுக்காக அமைதியாக போராடி வரும் மக்கள் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தினால் மக்களுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் களமிறங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.
மேலும், ஈரானில் நீண்ட காலமாக நடைபெற்று வரும் அணுசக்தித் திட்டங்களை நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றது.
இந்த நிலையில், ஈரான் மீது விரைவில் மிகப்பெரிய அளவிலான தாக்குதலை அமெரிக்கா நடத்தவுள்ளதாக நியூ யார்க் டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் தளங்களைக் குறிவைத்து பரந்த அளவிலான தாக்குதல் நடத்துவதற்கான செயல் திட்டத்தை டிரம்ப்பிடம் பென்டகன் முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பென்டகன் உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனையை டிரம்ப் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே கடந்தாண்டு ஜூன் மாதம் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் அணு சக்தி மறைவிடங்களைக் குறிவைத்து அமெரிக்காவின் பி-2 பாம்பர்ஸ் தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலைவிட மிகப்பெரிய அளவிலான தாக்குதலை தற்போது நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெனிசுவேலா படையெடுப்பைத் தொடர்ந்து தற்போது ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.