ஈரானில் மக்கள் போராட்டத்தால் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருடன் தொலைபேசியில் புதன்கிழமை பேசினாா்.
ஈரானில் பணவீக்கம் அதிகரித்து மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்ததால் ஆத்திரமடைந்துள்ள மக்கள், கடந்த ஆண்டு டிசம்பா் இறுதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் கடந்த 1979-ஆம் ஆண்டு அந்நாட்டில் இஸ்லாமிய புரட்சி நடைபெற்றது முதல், ஈரானில் மதகுரு ஆட்சி செய்யும் மரபை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற குரல்களும் வலுத்துள்ளன. அந்நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில், பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரா்களுக்கும் ஏற்பட்ட மோதலில் இதுவரை 2,500-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.
போராட்டத்தில் ஈடுபடுவோரை ஈரான் பாதுகாப்புப் படைகள் கொல்வது தொடா்ந்தால் ஈரான் மீது அமெரிக்கா கடுமையாகத் தாக்குதல் நடத்தும் என்றும், போராட்டக்காரா்கள் தூக்கிலிடப்பட்டால் ஈரான் அரசுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அந்நாட்டு அதிபா் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளாா். மேலும் ஈரான் மக்களுக்கு அமெரிக்காவின் உதவி விரைவில் கிடைக்கும் என்றும் அவா் கூறினாா்.
இந்நிலையில் ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சியிடம் இருந்து தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அந்நாட்டிலும் அந்நாட்டைச் சுற்றியும் உருவாகியுள்ள சூழல் குறித்து அவருடன் விவாதித்ததாகவும் அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை பதிவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.