பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் எட்டு உடல்கள் மீட்டெடுக்கப்பட்டதை அடுத்து, பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் எம்.ஏ. ஜின்னா சாலையில் குல் பிளாசா என்ற வணிக வளாகம் கடந்த சனிக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
குல் பிளாசாவில் மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தச் சந்தையில் மூன்று தளங்களிலும் கடைகள் இருந்த நிலையில், சனிக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் மூச்சுத்திணறல் காரணமாக 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர். மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர்,
தீ மற்ற தளங்களில் உள்ள கடைகளுக்கும் பரவியதால், மீட்புக் குழுக்களால் உள்ளே செல்ல இயலவில்லை. கடையொன்றில் ஏற்பட்ட மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயானது மளமளவென அருகிலுள்ள பல கடைகளுக்கும் பரவியது. தொடர்ந்து நடைபெற்ற மீட்புப் பணியில், மேலும் 8 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
மீட்புக் குழுவின் தீவிர போராட்டத்திற்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
குல் பிளாசாவில் மொத்தம் 1,200 கடைகள் கொண்ட பழைய கட்டடம் என்பதால் தூண்கள் பலவீனமடைந்துள்ளது. தீ விபத்தில் கட்டடம் கிட்டத்தட்ட முழுமையாகச் சேதமடைந்துள்ளது. கட்டடத்தில் மேலும் பலர் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
முன்னதாக கடந்த 2024ல் குல் பிளாசா வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டு உடனடியாக அணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.