அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்துள்ள டொனால்ட் டிரம்ப்பை, கிண்டலடிக்கும் விதமாக கலிஃபோர்னியா மாகாண ஆளுநர் கேவின் நியூசம் செய்யறிவு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் 2 ஆவது முறை ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, கடந்த ஓராண்டில் மட்டும் அவர் விதித்த வரிகள் மற்றும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதிபர் டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கைகள் அனைத்தும் இனம் மற்றும் மதரீதியான பாகுபாடுகளைக் கொண்டுள்ளதாக அமெரிக்காவின் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல்கள் உள்பட 8 முக்கிய போரை நிறுத்தியுள்ளதாக உரிமைக்கோரும் அதிபர் டிரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமென பகிரங்கமாக வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த கலிஃபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம் அதிபர் டிரம்ப்பின் ஓராண்டு ஆட்சியைக் கிண்டலடிக்கும் விதமாக செய்யறிவால் உருவாக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதுபற்றி, கலிஃபோர்னியா ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், மிகச் சிறிய குழந்தை உருவத்திலுள்ள அதிபர் டிரம்ப்புக்கு ஆளுநர் நியூசம் அமைதி பரிசு வழங்குவது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு, கலிஃபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம் கலிஃபோர்னியா அமைதி பரிசை வழங்கினார் எனவும் டாடியின் சிறிய உதவியாளருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதில் எங்களுடன் இணையுங்கள் எனவும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.