ஈரானில் ஆட்சிக்கு எதிராக நடைபெறும் மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்காக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் இதுவரை 6,100-க்கும் அதிகமானோர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பணமதிப்பு வீழ்ச்சியால், அந்நாடு முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் முதல் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்கள் அனைத்தையும் ஈரான் அரசு இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்தி வருகின்றது.
இந்த நிலையில், ஈரானில் அரசு போராட்டக்காரர்கள் மீது மேற்கொண்ட ஒடுக்குமுறைகளால் இதுவரை 6,126 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதில், 5,777 போராட்டக்காரர்கள், 214 அரசுப் படையினர், 86 குழந்தைகள் மற்றும் போராட்டங்களில் ஈடுபடாத 49 பேர் உள்ளிட்டோரும் கொல்லப்பட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த மாபெரும் போராட்டங்களில் இதுவரை 3,117 பேர் கொல்லப்பட்டதாகவும், அதில் 2,427 பேர் மக்கள் மற்றும் அரசுப் படையினர் எனவும் ஈரான் அரசு அறிவித்துள்ளது. மேலும், மீதமுள்ளவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என ஈரான் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கெனவே, போராட்டக்காரர்கள் மீதான ஈரான் அரசின் வன்முறைகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்.
மேலும், ஈரானின் மீது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரித்த அதிபர் டிரம்ப், அதற்காக ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ உள்ளிட்ட போா்க்கப்பல்களைக் களமிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.