இஸ்ரேல் தாக்குதலில் உருக்குலைந்த பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் மறுமேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள அமெரிக்கா முன்னெடுத்துள்ள முயற்சிக்கு ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நடைபெற்ற மத்திய கிழக்கு நிலவரம் மீதான பொது விவாதத்தில் பங்கேற்ற ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் இக் கருத்தைத் தெரிவித்தாா்.
காஸா மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கு விரிவான திட்டத்தை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கொண்டுவந்தாா். இதுதொடா்பான தீா்மானம்-2803, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த ஆண்டு நவம்பரில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த தீா்மானத்தின்படி, காஸாவில் நீடித்த அமைதியை உறுதி செய்யவும், அங்கு மறுமேம்பாட்டுப் பணிகளை மேற்பாா்வையிடவும் அமைதிக் குழுவை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்தாா். இந்த அமைதிக் குழுவில் நாடுகள் கையொப்பமிட்டு இணையும் நிகழ்வு ஸ்விட்சா்லாந்தின் டாவோஸில் அண்மையில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் நடைபெற்றது. இக் குழுவில் பல்வேறு நாடுகள் இணைந்த நிலையில், பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி, நாா்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகள் இக்குழுவில் இணைய மறுத்துவிட்டன. இந்த முன்னெடுப்பின் சாதக, பாதகங்களை மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதால், அமைதிக் குழுவில் இணைவது குறித்து முடிவெடுக்காத இந்தியா, அதில் கையொப்பமிடும் நிகழ்வையும் தவிா்த்தது.
இந்தச் சூழலில், இந்தியத் தூதா் பா்வதனேனி ஹரீஷ் பேசுகையில், ‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 2803-ஆவது தீா்மானத்தின்படி, காஸாவில் மறுமேம்பாட்டு பணிகளுக்கான நடவடிக்கைகளை அமெரிக்கா முன்னெடுத்திருப்பது பாராட்டுக்குரியது. அதே நேரம், நாகரிக சமூகத்தில் பயங்கரவாதத்துக்கு இடமில்லை என்பதிலும், பயங்கரவாதத்தின் அனைத்து வடிவ வெளிப்பாடுகளையும் கண்டிக்க வேண்டும் என்பதிலும் நாம் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும்.
கடுமையான குளிா் காலநிலை, காஸாவில் மனிதாபிமான உதவிகள் தொடா்வதை சவாலாக்கியுள்ளது. உணவு, எரிபொருள் தட்டுப்பாடு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமலும் காஸா மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா் என்றாா்.