முருகதாஸ் படத்தில் இரட்டை வேடத்தில் விஜய்?

First Published : 11 February 2014 02:45 PM IST


விஜய் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கப்பட்டது.

இந்தப் படத்தில் சமந்தா விஜய் ஜோடியாக நடிக்கிறார். முதல் நாள் படப்பிடிப்புகள் கொல்கத்தாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற காளி கோவிலில் வைத்து செவ்வனே தொடங்கியது. ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தில் விஜய்க்கு வில்லனாக யார் நடிக்கவிருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில் பெங்காலி நடிகர் தோட்டா ராய் செளத்ரி வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தில் தோட்டா இண்டர்நேஷனல் தாதாவாக நடித்து வருகிறார். பெங்காலியில் சரளமாக பேசத்தெரிந்த நடிகர் வேண்டும் என முருகதாஸ் தேடியபோது கிடைத்தவர்தான் இந்த டோடா ராய்.

கதைப்படி, இவரை பிடிப்பதற்காக கொல்கத்தா போலீஸ், லோக்கல் கிரிமினலான விஜய்யின் உதவியை நாடுகிறது. விஜய்யின் உதவியால் தாதாவை பிடித்து ஜெயிலில் அடைக்கிறார்கள். ஜெயிலில் இருந்து தப்பிக்கும் வில்லன், விஜய்யை கொலை செய்யத் தேடுகிறான். அப்போது தான் விஜய் தோற்றத்தில் இருவர் இருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது. இறுதியில் என்னவாகிறது என்பது தான் படத்தின் கதை. இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

கடந்த நான்கு நாட்களாக வில்லனை விஜய் துரத்தும் காட்சிகளை இரவு பத்து மணியில் இருந்து அதிகாலை நான்கு மணி வரை படமாக்கி இருக்கிறார் முருகதாஸ். இன்னும் சில தினங்களில் இங்கே படப்பிடிப்பை முடித்த கையோடு தொடர்ந்து வில்லன் டோடா ராய் ஜெயிலில் இருந்து தப்பிக்கும் காட்சிகளை எடுப்பதற்காக வரும் பிப்-21ல் ராஜமுந்திரிக்கு கிளம்புகிறார்கள் படக்குழுவினர்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த முதல் படமான 'துப்பாக்கி' படம் முழுவதும் மும்பையில் எடுக்கப்பட்டது. இந்தப் படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இந்தப் படம் போலவே, விஜய் - முருகதாஸ் இணையும் இந்தப் படம் முழுவதும் கொல்கத்தாவில் வருவது போல எடுக்கப்பட உள்ளதாம். இந்தப் படத்திற்கு 'வாள்' என்று பெயர்சூட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். விஜய்யுடன் அனிருத் இணையும் முதல் படம் என்பதால் இந்தப் படத்தின் இசை மீது ஒருவித எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் காமெடி வேடத்தில் சதீஷ் சேர்க்கப்பட்டுள்ளார். வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸ் செய்யப்படும் என்கிறார்கள்.
 

 
 

A+ A A-

இந்த பகுதியில் மேலும்