காங்கிரஸில் மீண்டும் வன்னியர் குரல் - Dinamani - Tamil Daily News

காங்கிரஸில் மீண்டும் வன்னியர் குரல்

First Published : 26 June 2010 04:05 AM IST


கிருஷ்ணசாமி சொல்வதுபோல காங்கிரஸில் வன்னியர்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லையா?

 இது குறித்து வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள்:

முன்னாள் எம்.எல்.ஏ. பலராமன்: வன்னியர் உள்பட அனைத்து சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளித்து வரும் கட்சி காங்கிரஸ் மட்டுமே.

வன்னியர்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியவர் ராமசாமி படையாச்சியார். அவர் காமராஜர் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இரண்டு முறை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். மற்றொரு வன்னியர் தலைவரான மாணிக்கவேல் நாயக்கர் ராஜாஜி அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்துள்ளார். காமராஜர் மற்றும் பக்தவத்சலம் அமைச்சரவையில் பூவராகன் அமைச்சராக இருந்துள்ளார்.

எம்.பி. சுப்பிரமணியம், வாழப்பாடி ராமமூர்த்தி, திண்டிவனம் ராமமூர்த்தி, எம். கிருஷ்ணசாமி ஆகிய நான்கு வன்னியர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்துள்ளனர். எந்தக் கட்சியிலும் கிடைக்காத வாய்ப்பு இது. ஏராளமான வன்னியர்கள் காங்கிரஸ் கட்சியில் எம்.பி.க்களாகவும், எம்.எல்.ஏ.க்களாக இருந்துள்ளனர். இன்றும் இருக்கின்றனர்.

காங்கிரஸில் மீண்டும் வன்னியர் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான எம். கிருஷ்ணசாமி காங்கிரஸில் வன்னியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது அக்கட்சியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் வரலாறு என்ற நூல் வெளியீட்டு விழா ஜூன் 20-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு ஆகியோர் முன்னிலையில் பேசிய கிருஷ்ணசாமி, கம்யூனிஸ்ட் கட்சிகளை மீறி தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைத்ததற்கு வன்னியர்கள்தான் காரணம்.

வன்னியர்கள் இல்லை என்றால் இன்று காங்கிரஸ் இல்லை. ஆனால், அன்றும் இன்றும் காங்கிரஸில் வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, 5 ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்த மருமகன் அன்புமணிக்கு இப்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவிகூட கிடைக்கவில்லை. எம்.பி.யாக இருந்தும் கிருஷ்ணசாமிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. எனவே, தனது குடும்பத்தின் ஆதிக்கம் அரசியலில் குறைந்ததால் ஏற்பட்ட விரக்தியில் இப்படியெல்லாம் பேசத் தொடங்கியுள்ளார் என்றார்.

எம்.சரவணன்.

முன்னாள் எம்.பி.அன்பரசு: காங்கிரஸில் வன்னியர்களுக்கு அவ்வப்போது உரிய. பிரதிநித்துவம் அளிக்கப்பட்டு வந்தது.ஆனால், இப்போது அது படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஒவ்வொரு மக்களவைத் தேர்தலிலும் 5 முதல் 6 வன்னியர்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக வாய்ப்பு இருந்தது. ஆனால், இப்போது 3 எம்.எல்.ஏ.க்களும். ஒரே ஒரு எம்.பி. மட்டுமே வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காங்கிரஸில் வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்று ஒட்டுமொத்தமாக கூறமுடியாது. கிருஷ்ணசாமி கூறியதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், சொல்லிய விதம்தான் தவறு.

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.