அதிமுக - தேமுதிக கூட்டணி அமைய வேண்டும்: சோ - Dinamani - Tamil Daily News

அதிமுக - தேமுதிக கூட்டணி அமைய வேண்டும்: சோ

First Published : 15 January 2011 05:14 AM IST

சென்னை, ஜன. 14: வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவைத் தோற்கடிக்க அதிமுக - தேமுதிக கூட்டணி அமைய வேண்டும் என்று துக்ளக் வார இதழின் ஆசிரியர் சோ ராமசாமி தெரிவித்தார்.

 சென்னை மியூசிக் அகாதெமி அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற துக்ளக் வார இதழின் 41-வது ஆண்டு விழாவில் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து அவர் பேசியது:

 "நாட்டில் நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது, ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் இந்திரா காந்தியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தது. அதுபோன்ற நிலை இப்போது தமிழகத்தில் உள்ளது. வரும் பேரவைத் தேர்தலில் திமுகவைத் தோற்கடித்தால்தான் நாட்டையே காப்பாற்ற முடியும். அது தமிழக மக்களின் கைகளில்தான் உள்ளது. நாட்டின் மீது அக்கறை உள்ளவர்கள் வாக்களித்தால் கண்டிப்பாக திமுக தோற்கும். திமுகவைத் தோற்கடிக்க அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் மட்டுமே முடியும். அதற்கு வலுவான கூட்டணி அமைய வேண்டும். அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க வேண்டும். திமுகவால் விஜயகாந்தும் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது திருமண மண்டபம் இடிக்கப்பட்டது. பொறியியல் கல்லூரிக்கு இடையூறு செய்தார்கள். திமுகவைத் தோற்கடிக்கும் கடமையில் இருந்து அவர் தவறக் கூடாது. தேமுதிக தனித்துப் போட்டியிட்டால் எதனையும் சாதிக்க முடியாது.

 திமுக ஆட்சியில் தமிழகத்தை ஒரு குடும்பமே கொள்ளையடிக்கிறது. இதுபோன்ற நிலை இந்தியாவில் எங்கும் இல்லை. சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளது. பள்ளிக் குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். அவர்களைக் காவல்துறை பணம் கொடுத்து மீட்கிறது. பணம் கொடுத்து மீட்பதற்கு காவல்துறை எதற்கு? பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதைவிட குழந்தைகளை பாதுகாப்பதில்தான் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

 திரைப்படத் துறை முதல்வரின் குடும்பத்தின் பிடிக்குள் சென்று விட்டது. கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் தயவு இல்லாமல் எந்தப் படத்தையும் திரையிட முடியாது என்று உச்சத்தில் உள்ள நடிகர்களே கூறுகின்றனர்.

 அடுத்து ரியல் எஸ்டேட் தொழிலுக்கு அவர்கள் வந்து விட்டனர். திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்தால் எல்லாவற்றையும் கருணாநிதியின் குடும்பத்துக்கு கொடுத்துவிட வேண்டியதுதான்.

 துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அண்ணன் அழகிரியை சமாளிக்கவே நேரம் போதவில்லை. அதற்கே மூச்சு முட்டும்போது அவரால் எப்படி சிறப்பாக செயல்பட முடியும்? சென்னை சங்கமம் விழாவுக்கு அரசு விளம்பரத்தில் தமிழ் மையத்தின் பெயர் இடம் பெறக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகும் சங்கமம் விழாவில் முதல்வர் கருணாநிதி, ஜெகத் கஸ்பருடன் பங்கேற்றிருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். குடும்பத்தில் அனைவரையும் அரசியலுக்குக் கொண்டு வந்ததால் பிரச்னையை எதிர்கொண்டு வருகிறார்.

 பிரதமர் மன்மோகன் சிங் நேர்மையைக் கொலை செய்து புதைத்து விட்டார். 2ஜி அலைக்கற்றை ஊழலில் ஆ. ராசாவை அவரால் தட்டிக்கேட்க முடியவில்லை. பிரதமர் பதவிக்காக நேர்மை, நாணயம் எல்லாவற்றையும் துறந்துவிட்டார். இனி 2ஜி அலைக்கற்றை ஊழலை மன்மோகன் சிங்கும், சோனியாவும் பார்த்துக்கொள்வார்கள்.

 ராமஜென்ம பூமி வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு, குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை என்ற சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கை, பிகார் தேர்தல் வெற்றி ஆகியவை பாஜகவுக்கு சாதகமான அம்சங்கள். கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீதுள்ள கரும்புள்ளி பாஜகவை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அத்வானியைப் போன்ற தலைசிறந்த தலைவர்கள் யாரும் இந்தியாவில் இல்லை. அவர் போன்றவர்களால் மட்டுமே சிறந்த நிர்வாகத்தைத் தர முடியும். வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பணத்தை மீட்க முடியும். காங்கிரஸ் கட்சிக்கு மாற்று பாஜக மட்டுமே. காங்கிரஸ் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆந்திரம், மகாராஷ்டிரத்தில் அக்கட்சிக்கு சிக்கல். ஒரிசா, குஜராத்தில் காங்கிரஸýக்கு வேலையே இல்லை. ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. பிகாரில் ராகுல் காந்தி குடிசையில் உணவருந்தியும் பலனில்லை. இந்த வாய்ப்பை பாஜக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார் சோ ராமசாமி.

 மாநிலங்களவை உறுப்பினர்கள் டி.கே. ரெங்கராஜன், வா. மைத்ரேயன், பாஜக அகில இந்திய செயற்குழு உறுப்பினர், இல. கணேசன், தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மாநில துணைத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன், இந்து முன்னணி நிறுவனர் இராம. கோபாலன், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன், எஸ்.வி. சேகர் எம்.எல்.ஏ., திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தர், நடிகர் சிவக்குமார் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

ஜெயலலிதா வசீகரமான தலைவர்

 மக்களை ஈர்க்கும் வசீகரமான தலைவர் ஜெயலலிதா என்று துக்ளக் ஆசிரியர் சோ. ராமசாமி புகழாரம் சூட்டினார்.

 "மக்களை ஈர்க்கும் வசீகரமான, துணிச்சலான தலைவர் ஜெயலலிதா. அவருக்கு எம்.ஜி.ஆரின் புகழ் உதவி செய்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால், எம்.ஜி.ஆருக்குப் பிறகு அதிமுக வெற்றி பெற்றதற்கு ஜெயலலிதாவின் திறமையே முக்கிய காரணம்.

 ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அவரின் நிர்வாகத் திறமையையும், முடிவு எடுப்பதில் காட்டும் துணிச்சலையும் பாராட்டுகின்றனர்.

 கருணாநிதியின் அறிக்கையில் குழப்பமே இருக்கும். ஜெயலலிதாவின் அறிக்கையில் தெளிவு இருக்கும். கருணாநிதி பெண் போல புலம்ப ஆரம்பித்துவிட்டார். ஜெயலலிதா ஆண் போல நிமிர்ந்து நிற்கிறார். கருணாநிதியிடம் பெண் தன்மையையும், ஜெயலலிதாவிடம் ஆண் தன்மையும் நான் பார்க்கிறேன். கருணாநிதியின் ஆட்சியை வீழ்த்த ஜெயலலிதாவால் மட்டுமே முடியும் என்பதை தமிழக மக்கள் உணர்ந்து விட்டார்கள்' என்றார் சோ.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.