வால்பாறை கிராமங்களில் முதுவர் இன மக்களிடம் 10 ஆண்டுகளாக குழந்தை பிறக்காத அவலம்: பேரவை மனுக்கள் குழுவிடம் முறையீடு - Dinamani - Tamil Daily News

வால்பாறை கிராமங்களில் முதுவர் இன மக்களிடம் 10 ஆண்டுகளாக குழந்தை பிறக்காத அவலம்: பேரவை மனுக்கள் குழுவிடம் முறையீடு

First Published : 20 January 2011 10:15 AM IST


திருப்பூர், ஜன. 19: வால்பாறை மலைப்பகுதியிலுள்ள இரு கிராமங்களில் வசிக்கும் முதுவர் இன மக்களிடையே 10 ஆண்டுகளாக குழந்தைகள் பிறக்காத நிலை நிலவுகிறது. அப்பகுதியில் மருத்துவத் துறை சார்பில் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு மலைவாழ் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று, திருப்பூரில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட பேரவை மனுக்கள் குழுவிடம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 ÷கோவை மாவட்டம், வால்பாறை தாலுகாவில் வெள்ளிமுடி, சங்கரன்குடி ஆகிய இரு மலைக் கிராமங்கள் உள்ளன. இவ்விரு கிராமங்களிலும் முதுவர் இனத்தைச் சேர்ந்த சுமார் 65 குடும்பங்கள் வசித்து வருகின்றன. போதிய படிப்பறிவு இல்லாத அந்த இனத்தைச் சேர்ந்த மக்கள் விவசாயம் மற்றும் சிறு விறகுகள் விற்பது உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.

 ÷கடந்த பல ஆண்டுகளுக்கு முன்வரை ஒரு வீட்டில் 4 முதல் 7 குழந்தைகள் வரை பெற்றுக்கொண்ட நிலையில், தற்போது அக் குடும்பங்களில் 10 ஆண்டுகளாக குழந்தைகளே பிறக்காத அவல நிலை நீடிப்பதாகக் கூறப்படுகிறது.

 ÷பொதுவாக முதுவர் இனத்தைச் சேர்ந்த பெண்களை மாதவிடாய்க் காலத்தில் வீட்டிலிருந்து 3 நாட்கள் ஒதுக்கி தனியாக அமர்த்தி விடுவார்களாம். வனப்பகுதியில் இரவு பகல் முழுவதும் தனியாக அமர்ந்திருக்க அச்சப்படும் அப்பெண்கள் மாதவிடாய் ஏற்படுவதைத் தடுக்க தொடர்ந்து மாத்திரைகளை உட்கொள்வதால் நாளடைவில் கர்ப்பம் தரிக்க முடியாத அவலநிலை அப்பெண்களிடம் ஏற்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மழைவாழ் மக்கள் சங்கத்தினர் (மார்க்சிஸ்ட்) கூறுகின்றனர்.

 ÷இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.செல்வன் மேலும் கூறியதாவது:

 ÷வால்பாறை தாலுகாவிலுள்ள மலைக் கிராமங்களில் வசிக்கும் முதுவர் இன மக்களிடையே நிலவும் இப் பாதிப்புகளை தடுக்கவும், உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அப்பகுதி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களிடம் ஏற்கனவே பலமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ÷இருப்பினும், சம்பந்தப்பட்ட வெள்ளிமுடி, சங்கரன்குடி ஆகிய கிராமங்கள் வாகனங்கள் செல்ல முடியாத அடர்ந்த வனப்பகுதிக்குள் இருப்பதால் அங்கு மருத்துவர்கள் செல்லத் தயக்கம் காட்டுகின்றனர்.

 ÷அதேபோல், உடுமலை அருகே உள்ள பூச்சிக்கொட்டப்பாறை, சேலையூத்து, கருமுட்டி, வசம்புகுளம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் முதுவர் இன மக்களிடையேயும் குழந்தைப்பேறு குறைந்து வருவது தெரியவந்துள்ளது. இதேநிலை தொடருமானால் அந்த மலைவாழ் மக்கள் இனம் காணாமல் போகும் சூழல் ஏற்பட்டுவிடும் என்றார்.

 ÷திருப்பூரில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட கோவை தங்கம் எம்எல்ஏ தலைமையிலான சட்டப்பேரவை மனுக்கள் குழுவிடம், இப்பிரச்னை குறித்து அச்சங்கம் முறையிட்டது.

 ÷முதுவர் இன மலைவாழ் மக்களிடம் நிலவும் இந்த அவலநிலையைப் போக்க போதிய விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போது வலியுறுத்தப்பட்டது.

இந்தப் பகுதியில் மேலும்

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.