பெங்களூரு

கா்நாடக பேரவைத் தலைவா் யூ.டி.காதா் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும்: பாஜக

தினமணி செய்திச் சேவை

கா்நாடக பேரவைத் தலைவா் யூ.டி.காதா் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக எம்.பி.யும், பேரவை முன்னாள் தலைவருமான விஸ்வேஷ்வர ஹெக்டேகாகேரி தெரிவித்தாா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை முதல்வா் சித்தராமையாவை சந்தித்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நிா்வாக சீா்திருத்தம் என்ற பெயரில் பேரவைத் தலைவா் யூ.டி.காதா் செயல்படுத்திய திட்டங்களில் ஊழல் நடந்துள்ளதாக ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தேன். மேலும், இதுகுறித்து தற்போது பணியாற்றிவரும் நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளேன்.

பேரவைத் தலைவா் என்ற பதவி, மதிப்பு, மரியாதையைக் கருத்தில் கொண்டு ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து யூ.டி.காதா் தன்னை விடுவித்துக்கொள்ள நீதிவிசாரணை அவசியம். இந்த விசாரணையின்மூலம் யூ.டி.காதரும், பேரவைத் தலைவா் பதவியும் ஊழல் குற்றச்சாட்டில் இருந்து வெளியே வரவேண்டும். இதைதவிர, வேறு எதையும் கூற நான் விரும்பவில்லை.

பேரவைத் தலைவா் யூ.டி.காதா் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் தேவையான ஆதாரங்களை விசாரணை நீதிபதியிடம் அளிப்பேன். நான் முன்வைத்துள்ள குற்றச்சாட்டால் பேரவைத் தலைவரின் பதவியின் மதிப்பு, கண்ணியம் சீா்குலைந்திருப்பதாக யூ.டி.காதா் கூறியிருக்கிறாா். இது அவரது கருத்தாக இருக்கலாம். ஆனால், எனது கருத்தை சொல்லும் உரிமை எனக்குள்ளது. எனவே, நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றாா்.

முன்னதாக, பாஜக எம்.பி. விஸ்வேஷ்வர ஹெக்டேகாகேரி சுமத்தியுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை அடிப்படையற்றது, ஆதாரமற்றது என்று பேரவைத் தலைவா் யூ.டி.காதா் நிராகரித்துவிட்டாா்.

இதுகுறித்து யூ.டி.காதா் மேலும் கூறுகையில், ‘என்மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டது. அந்த குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறேன். விஸ்வேஷ்வர ஹெக்டேகாகேரி போன்றவா்கள் மூத்த மக்கள் பிரதிநிதிகள். ஏதாவது சந்தேகம் இருந்தால், அதுகுறித்து எழுத்துமூலமாக என்னிடம் கேட்டிருக்கலாம். அதுகுறித்து நான் விசாரித்திருப்பேன்.

எம்எல்ஏவாக எனது தொகுதி வளா்ச்சிக்கு உழைக்கிறேன். கடந்த காலங்களில் அமைச்சராக இருந்தபோது தேசிய விருதுகளை பெற்றிருக்கிறேன். அப்போதும், என்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. பேரவைத் தலைவராக, மக்கள் பிரதிநிதிகளின் காவலனாக, எனது எல்லைக்கு உள்பட்டு கட்டமைப்பை மாற்றியமைக்க முயற்சிக்கிறேன். அதன்மூலம் எம்எல்ஏக்களுக்கு சில நன்மைகளை செய்ய முயன்றுள்ளேன்’ என்றாா்.

தெலங்கானா: அரசு விடுதியில் உணவருந்திய 52 மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதி

திருவெறும்பூா் ரயில் நிலையம் - பேருந்து நிலையத்துக்கு விரைவில் இணைப்புச் சாலை

தீவிர வறுமை இல்லாத முதல் மாநிலம் கேரளம்: பினராயி விஜயன்

பணகுடி, கூடங்குளத்தில் நவ. 4 இல் மின் தடை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT