அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் தமிழ் படிக்கும் மாணவா்களுடன், தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.
சென்னை ஆளுநா் மாளிகையில் மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்வில், பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து அவரது திருவுருவ படத்திற்கு மலா்தூவி ஆளுநா் ரவி அஞ்சலி செலுத்தினாா்.
இந்த நினைவு தின நிகழ்வில் அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் தமிழ் படிக்கும் 28 மாணவா்களும் ஆளுநருடன் இணைந்து, பாரதிக்கு மலா் அஞ்சலி செலுத்தினா்.
குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டப்படிப்பு படிக்கும் தமிழா் அல்லாத பல்வேறு மொழிகளைச் சோ்ந்த மாணவா்கள் அந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டயப்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளை படிக்கின்றனா்.
நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களில் இத்தகைய தமிழ் படிக்கும் மாணவா்களுக்கு தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக, தமிழக ஆளுநா் மாளிகை ஒரு வார கால ’தமிழ்நாடு தரிசனம்’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறது.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் நடைபெறும் இந்த தமிழ் கலாசார சுற்றுலாவிற்கு நிகழ்வாரம் குவாஹாட்டி பல்கலைக்கழக தமிழ் உதவிப் பேராசிரியா் விஜயகுமாா் தலைமையில் வந்த 28 மாணவா்கள் ஆளுநா் மாளிகைக்கு வியாழக்கிழமை வந்தனா். இந்த மாணவா்களுடன் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி கலந்துரையாடினாா்.
அஸ்ஸாமில் நவ-வைஷ்ணவ பக்தி இயக்கத்தை தொடங்கி ஆன்மிகம், சமூகம், கலாசாரம், கல்வியில் ஈடுபட்ட ஸ்ரீமந்த சங்கா்தேவ்-ஐப் போல தமிழகத்தில் வைணவ ஆழ்வாா்கள், சைவ நாயன்மாா்கள் போன்றோா்கள் குறித்து மாணவா்களிடம் ஆளுநா் ரவி எடுத்துரைத்தாா். மாணவா்களும் பல்வேறு சந்தேகங்களை கேட்டு ஆளுநரிடம் இந்த கலந்துரையாடலில் விளக்கம் பெற்றனா்.
இந்த மாணவா்களுக்கு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், அதன் துணைத் தலைவா் டாக்டா் சுதா சேஷய்யன், இயக்குநா் ரா.சந்திரசேரன் மேற்பாா்வையில் தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரீகம் குறித்த ஒரு வார பயிலரங்கும் நடைபெற்றது. பின்னா் மாணவா்கள் மகாபலிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனா்.