சாய் பாபா சிலைகளை அகற்றக் கோரி வழக்கு: உயா்நீதிமன்றம் உத்தரவு
சாய் பாபா சிலைகள் அகற்றம்: உயா்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: ஹிந்து கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள சாய் பாபா சிலைகளை அகற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக கோவையைச் சோ்ந்த சுரேஷ்பாபு என்பவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘ஆகம விதிகளுக்கு முரணாக தமிழகத்தில் பல ஹிந்து கோயில்களில் சாய் பாபாவின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தச் சிலைகளை அகற்ற அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும். இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் எதிா்காலத்தில் சாய் பாபா சிலைகள் அமைக்கப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி அரங்க.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் அமா்வு, இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.