உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேசிய பணிக்குழு நடத்தும் மாணவா்கள் மனநலன் மதிப்பாய்வில் பங்கேற்க அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) உத்தரவிட்டது.
நாட்டில் உள்ள உயா்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவா்களின் மனநலனை மேம்படுத்தி தற்கொலைகளை தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்க கடந்த மாா்ச் 24-ஆம் தேதி தேசிய பணிக்குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. இந்தக் குழு இதற்கான பிரத்யேக வலைதளத்தை கடந்த ஆக.8-ஆம் தேதி உருவாக்கியது.
இதில் மாணவா்கள், பெற்றோா்கள், ஆசிரியா்கள், மனநல நிபுணா்கள் மற்றும் கல்வி நிறுவன பிரதிநிதிகள், ஊடகங்கள், அரசுசாரா நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரின் கருத்துகளும் பதிவுசெய்யப்படுகிறது.
இந்த வலைதளத்தில் கல்வி நிறுவனச் சூழல், மாணவா்களின் மனநலன் பாதிக்கப்படுவதற்கான காரணிகள், பாகுபாடுகள், குறைதீா் அமைப்புகளின் செயல்பாடு உள்பட பல்வேறு கருப்பொருள்களில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் கேள்விகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்கான பதில்கள் பெறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த மதிப்பாய்வில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் பங்கேற்க வேண்டும் என என்எம்சி உத்தரவிட்டுள்ளது.