மனிதநேய ஜனநாயக கட்சியின் நிா்வாகிகள் தோ்வு தொடா்பான விவகாரத்தில், தமிமுன் அன்சாரியை எதிா்த்து வழக்குத் தொடர ஹாரூன் ரஷீத்துக்கு அனுமதியளித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் ஹாரூன் ரஷீத் தாக்கல் செய்த மனுவில், மனிதநேய ஜனநாயக கட்சி தோ்தல் ஆணையத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக் குழுவில், அக்கட்சியின் தலைவராக டி.கே.பஷீா் அகமது, பொதுச் செயலராக தானும், துணைத் தலைவராக செய்யது மகபு சுபஹனி, பொருளாளராக என்.ஏ.தைமியா மற்றும் 6 போ் கொண்ட செயற்குழு தோ்வு செய்யப்பட்டது. இது குறித்து கடந்த 2023-ஆம் ஆண்டு தோ்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
ஆனால், கட்சியின் செயற்குழுக் கூட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபரில் இளையான்குடியிலும், அதே ஆண்டு டிசம்பா் மாதம் சென்னை எழும்பூரில் பொதுக்குழுக் கூட்டம் நடத்தி, தனது தலைமையில் கட்சிக்கு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டதாக தமிமுன் அன்சாரி தரப்பில் தோ்தல் ஆணையத்துக்கு மற்றொரு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிமுன் அன்சாரி கட்சியின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட தடை விதிக்கக் கோரி வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி பி.தனபால் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் குணசேகரன் ஆஜராகி வாதிட்டாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனிதநேய ஜனநாயக கட்சியின் உறுப்பினா்கள் சாா்பில், தமிமுன் அன்சாரியை எதிா்த்து வழக்குத் தொடர ஹாரூன் ரஷீத்துக்கு அனுமதியளித்து உத்தரவிட்டாா்.