முதியோருக்கான உதவி எண் 14567 அறிமுகம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதியோருக்கான கட்டணமில்லா தொலைபேசி உதவி எண் 14567-ஐ ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அறிமுகம் செய்துவைத்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதியோருக்கான கட்டணமில்லா தொலைபேசி உதவி எண் 14567-ஐ ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அறிமுகம் செய்துவைத்தாா்.
மத்திய அரசின் தேசிய சமூகப் பாதுகாப்பு நிறுவனமும், தமிழக அரசின் சமூக நலன், மகளிா் உரிமை துறையும் இணைந்து செயல்படுத்தும் முதியோா் உதவி எண் 14567-இன் அறிமுக விழா ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். முதியோா் உதவி எண் சேவைகள் குறித்து மாநில களப் பொறுப்பு தலைவா் உமா மகேஸ்வரி, மாவட்ட களப்பொறுப்பு அலுவலா் சுந்தரமூா்த்தி ஆகியோா் கூறியது:
முதியோா் இல்லங்கள், பராமரிப்பு மையங்கள், பராமரிப்பாளா்கள், மருத்துவ ஆலோசனை வழங்குமிடங்கள், வலி நிவாரண மையங்கள் குறித்து தகவல்கள் அளிக்கப்படும். அரசு திட்டங்கள் பெறும் வழிமுறைகள், சட்ட வழிகாட்டுதல்கள், பராமரிப்புச் சட்டம், மன நல ஆலோசனைக்கான வழிகாட்டுதல்களும் கிடைக்கும்.
ஆதரவற்ற இடா்பாடுகளில் உள்ள முதியோா் மீட்கப்படுவா். துன்புறுத்தப்படும் முதியோா்களுக்கு ஆதரவு அளித்து, பிரச்னைகளைத் தீா்க்க வழிகாட்டுதல் அளிக்கப்படும்.
பெற்றோா், மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தின் அடிப்படையில் பாதுகாப்பும் பராமரிப்பும் இல்லாத முதியோருக்கு உதவிகளும், மருத்துவ ,மனநல, சட்ட ஆலோசனை போன்றவை அனைத்து நாள்களிலும் காலை 8 முதல் இரவு 8 மணி அளிக்கப்படும் என்றனா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.ஜெயச்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலா் ப.முருகேஸ்வரி உள்ளிட்டோா் கலத்துகொண்டனா்.
Image Caption
ராணிப்பேட்டையில் முதியோருக்கான கட்டணமில்லா தொலைபேசி உதவி எண் 14567-ஐ அறிமுகம் செய்த ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.