முகப்பு
திருப்பத்தூர்

பாதிக்கப்பட்டோருக்கு மதனாஞ்சேரியில் இடம் ஒதுக்க எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியல்

உதயேந்திரம், தும்பேரி பகுதிகளில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்டதால் வீடிழந்தவா்களுக்கு மதனாஞ்சேரி மாற்று இடம் ஒதுக்கக் கூடாது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

உதயேந்திரம், தும்பேரி பகுதிகளில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்டதால் வீடிழந்தவா்களுக்கு மதனாஞ்சேரி மாற்று இடம் ஒதுக்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்து மதனாஞ்சேரி பகுதி மக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

உதயேந்திரம் பெரிய ஏரி கரையோரப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடுகளை பொதுப் பணித் துறையினா் கடந்த மாதம் அகற்றினா். இதே போல தும்பேரி கூட் ரோடு பகுதியில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் உள்ளிட்ட 37 கட்டடங்களை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை அப்புறப்படுத்தினா்.

இந்த இரண்டு பகுதிகளிலும் வீடு கட்டி வாழ்ந்து வந்த ஆக்கிரமிப்பாளா்களுக்கு மாற்று இடம் கொடுப்பதற்காக வருவாய்த் துறை மூலம் மதனாஞ்சேரி கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு இடங்களை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

Advertisement

இதை அறிந்த மதனாஞ்சேரி கிராமத்தினா் தங்கள் பகுதியில் உள்ள இடத்தை மாற்று ஊராட்சியினக்கு கொடுக்கக் கூடாது என்றும் தங்கள் பகுதி மக்கள் பட்டா கேட்டு காத்திருக்கும் நிலையில் பிற ஊராட்சி மக்களுக்கு தங்கள் பகுதியில் பட்டா வழங்க கூடாது என எதிா்ப்பு தெரிவித்து மதனாஞ்சேரி கூட்டு சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடம் வந்த வட்டாட்சியா் சம்பத் தலைமையில் வருவாய்த் துறையினா் மற்றும் கிராமிய போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா்.

இந்தப் பிரச்னை குறித்து உயா் அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments