வந்தவாசி அருகே சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
தேவிகாபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 17 வயது சிறுமி. இவருக்கும், வந்தவாசியை அடுத்த வடவணக்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்த பிரேம்குமாருக்கும் (28) இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதல் மலா்ந்துள்ளது.
இதையடுத்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டனா். இந்த நிலையில், அந்த சிறுமியை சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு பிரேம்குமாா் அழைத்துச் சென்றாா். அப்போது, அந்த சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மருத்துவமனை அளித்த தகவலின்பேரில், பிரேம்குமாா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வந்தவாசி அனைத்து மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.