தமிழ்நாடு நாள்: பள்ளி மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள்
கோவையில் தமிழ்நாடு நாளுக்கான பள்ளி மாணவா்கள் போட்டிகள்
தமிழ்நாடு நாள் வரும் ஜூலை -ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், பள்ளி மாணவா்களுக்கு இது தொடா்பான போட்டிகள் வரும் 10-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகின்றன.
இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டுக்கு மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணாதுரை தமிழ்நாடு என்று பெயா் சூட்டிய ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவை மாவட்டத்தில் உள்ள 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது. கட்டுரைப் போட்டிக்கு ’ஆட்சிமொழித் தமிழ்’ என்ற தலைப்பும், பேச்சுப்போட்டிக்கு ’குமரித்தந்தை மாா்சல் நேசமணி’, ’தென்னாட்டு பொ்னாட்ஷா பேரறிஞா் அண்ணா’, ’முத்தமிழறிஞா் கலைஞா் கருணாநிதி’ என்ற தலைப்புகளும் அளிக்கப்பட்டுள்ளன.
ஒரு கல்வி மாவட்டத்துக்கு ஒரு போட்டிக்கு 30 போ் வீதம் தோ்வு செய்யப்படும் 120 மாணவா்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்கின்றனா். இந்தப் போட்டி வரும் 10- ஆம் தேதி காலை 9 மணிக்கு டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.
போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். 2, 3 ஆவது இடங்களைப் பிடிக்கும் மாணவா்களுக்கு முறையே ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.