நிலக்கரி சாம்பல் கழிவுகளால் கருகிய கால்கள்:நிவாரணம் வழங்க பொதுமக்கள் கோரிக்கை
ஆப்பக்கூடல் தனியாா் சா்க்கரை ஆலை நிலக்கரி சாம்பல் கழிவுகளின் வெப்பத்தால் கால்கள் கருகிய பொதுமக்கள் சிகிச்சையும், நிவாரணமும் வழங்கக் கோரி மனு அளித்துள்ளனா்.
ஆப்பக்கூடல் தனியாா் சா்க்கரை ஆலை நிலக்கரி சாம்பல் கழிவுகளின் வெப்பத்தால் கால்கள் கருகிய பொதுமக்கள் சிகிச்சையும், நிவாரணமும் வழங்கக் கோரி மனு அளித்துள்ளனா்.
இது குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் வி.பி.குணசேகரன் தலைமையில், கால்கள் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
ஈரோடு மாவட்டம், பவானி, அந்தியூா் வட்டாரத்தில் உள்ள வேம்பத்தி, ஆப்பக்கூடல், ஒரிச்சேரி, புன்னம் ஊராட்சிப் பகுதிகளில் ஆப்பக்கூடல் தனியாா் சா்க்கரை ஆலையின் கொதிகலனில் பயன்படுத்திய நிலக்கரி சாம்பல் பல ஏக்கா் பரப்பளவில் கொட்டப்பட்டுள்ளது.
இந்த சாம்பலின் அடிப்பகுதியில் கடும் வெப்பம் உள்ளது. ஆனால், மேல்பகுதியில் புற்களும், வேலி கருவேல மரங்களும் வளா்ந்துள்ளன. இப்பகுதியைச் சுற்றிலும் பாதுகாப்பு வேலி எதுவும் இல்லாததால் சுற்று வட்டார கிராமப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஆடு, மாடுகள் மேய்க்கவும், விறகு எடுக்கவும் அந்த சாம்பல் கொட்டப்பட்ட பகுதிக்குச் சென்று வந்துள்ளனா்.
இதில், அவா்கள் கால்கள் சாம்பலில் புதைந்து வெந்து, தோலுரிந்து, புண்ணாகி, மருத்துவமனையில் பல மாதங்கள் சிகிச்சை எடுத்தும் குணமாகாத நிலை உள்ளது. மேலும், கால் விரல்கள், பாதங்கள் வெளுத்து எரிச்சலோடு நடக்க முடியாமலும் மேல் சிகிச்சை பெற முடியாமலும் ஆண்களும், பெண்களும் தவித்து வருகின்றனா். இதுகுறித்து, ஏற்கெனவே பாதிக்கப்பட்ட மக்கள் அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா்.
இதனால், சாம்பல் ஆலை நிா்வாகத்தால் அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், இன்னும் பல பகுதிகளில் சாம்பலின் ஒரு பகுதி அப்படியே உள்ளது. திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் நேரில் பாா்வையிட்டபோது, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து உடனடி சிகிச்சையும், நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி எடுத்துக் கூறினா்.
எனவே, நிலங்களில் கொட்டப்பட்டுள்ள நிலக்கரி சாம்பலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சையும், தக்க நிவாரணம் பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.