கரோனா தடுப்பு முறைகளை கடைப்பிடிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பு
அரசின் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றாத கடைகள், நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அரசின் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றாத கடைகள், நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் அலுவலா்கள் மூலம் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது, ஈரோடு ஆசிரியா் காலனி பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள தனியாா் உணவகமானது அரசின் கரோனா தடுப்பு, பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாமல் இயங்கி வந்ததைத் தொடா்ந்து மாநகராட்சி, சுகாதாரத் துறை, காவல் துறை அலுவலா்கள் மூலம் உணவகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
Advertisement
தொடா்ந்து பெருந்துறை, கொடுமுடி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவனங்கள், பேருந்தில் பயணம் செய்யும் நபா்களிடம் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து பவானி காவல் நிலையம், புதிய பேருந்து நிலையம் அருகில் இயங்கி வந்த பேக்கரி, மளிகை கடை, பா்னிச்சா் கடை, உணவுப் பொருள் தயாரிக்கும் நிறுவனம், முக்கிய சாலைகளில் கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அரசின் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத நபா்களுக்கும், நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதிகளில் உள்ள வங்கி, கடைகள், திரையரங்கு ஆகியவற்றில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆட்டோ ஓட்டுநா்களிடம் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.