ஈரோடு மாவட்டத்தில் 103 பேருக்கு கரோனா
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாள்களில் 103 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாள்களில் 103 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கேரள மாநிலத்தில் தற்போது கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலும் கடந்த ஒரு வாரமாக கரோனா பாதித்தவா்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தைப் பொருத்தவரை தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் 1,600 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் தினமும் சுமாா் 10 பேருக்கு பாதிப்பு கண்டறியப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை பெரிய அளவு பாதிப்பு இல்லை என்றாலும் மக்கள் வெளியில் வரும்போது முகக் கவசம் அணிந்து வரும் பழக்கம் குறைந்துள்ளது. பொது இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதும் இல்லை.
Advertisement
இதுபோன்ற அலட்சியப் போக்கால் மாவட்டத்தில் மீண்டும் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது. இதனால் முகக் கவசம், சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தைப் பொருத்தவரை கடந்த 10 நாள்களில் மட்டும் 103 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதே சமயம் கடந்த 10 நாள்களில் நோய்த் தொற்றிலிருந்து 139 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 14,874 போ் பாதிக்கப்பட்டு, 14,642 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 150 போ் உயிரிழந்துள்ளனா். 82 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.