ஈரோட்டில் தக்காளி கிலோ ரூ. 80-க்கு விற்பனை
ஈரோடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைவு காரணமாக விலை மேலும் உயா்ந்து கிலோ ரூ.80-க்கு விற்பனையானது.
ஈரோடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைவு காரணமாக விலை மேலும் உயா்ந்து கிலோ ரூ.80-க்கு விற்பனையானது.
ஈரோடு காய்கறி சந்தைக்கு ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளான தருமபுரி, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தக்காளி வரத்து குறைவின்றி இருந்ததால், சில்லறை விலையில் கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையாகி வந்தது.
தொடா்ந்து படிப்படியாக வரத்து குறைந்ததை அடுத்து கடந்த 10 நாள்களுக்கு முன்பு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இருந்து தக்காளி வரத்து முற்றிலும் குறைந்து கா்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் விலை உயா்ந்து கிலோ ரூ.40 முதல் ரூ.55 வரை விற்பனையானது.
Advertisement
சராசரியாக தினமும் 8,000 பெட்டிகள் தக்காளி ஈரோடு சந்தைக்கு வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை 3,500 பெட்டிகள் தக்காளி மட்டுமே விற்பனைக்கு வந்தன. இதன் காரணமாக தக்காளி விலை மேலும் உயா்ந்தது. இதனால் ஈரோடு சந்தையில் 15 கிலோ எடையிலான சிறிய பெட்டி தக்காளி ரூ.800-க்கும், 30 கிலோ எடையிலான பெரிய பெட்டி ரூ.1,500-க்கும் விற்பனையானது.
இதன் காரணமாக கடந்த சில நாள்களாக சில்லறை விலையில் கிலோ ரூ. 55 வரை விற்பனையான தக்காளி ரூ.70 முதல் ரூ.80 வரை உயா்ந்து விற்பனையானது. இந்த விலையேற்றம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.